வன்னி மக்கள் மீதான படுகொலையை தடுத்து நிறுத்துமாறு அவசர வேண்டுகோள்: பா.உ. கஜேந்திரன்

வன்னியில் உள்ள மக்கள் மீது சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுவரும் இனப் படுகொலைகளை தடுத்துநிறுத்த அவசர நடவடிக்கை எடுக்கும்படி கொழும்பிலுள்ள தூதரகங்களிடம் அவசர கோரிக்கை ஒன்றினை தமிழ் தேசிய கூட்டமைப்ப யாழ் மாவட்ட பா.உ செல்வராஜா கஜேந்திரன் விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள நோர்வே, அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகிய நாட்டு துதரகங்களுக்கு அவர் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் வருமாறு:-

வன்னி மக்கள் மீது இடம் பெறும் மனித வதைகளை தடுத்து நிறுத்த அவசர நடவடிக்கை எடுக்கும்படி கோருகின்றேன் கடந்த ஒருவாரகாலமாக வன்னிக்கும் வவுனியாவுக்குமான தரை வழிப்பாதை மூடப்பட்டுள்ளமையினால் பொதுமக்கள் நோயாளர்கள் பெரும் அவலத்தினை சந்தித்து வருகின்றனர்.

அவசரசிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பப்பட வேண்டிய நோயாளர்களை கூட வவுனியாவுக்கு எடுத்து வர சிறீலங்கா அரசு அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக கடந்த ஒரு வார காலத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வவுனியாவில் இருந்து உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படாமையினால் வன்னியில் உள்ள சுமார் ஐந்து இலட்சம் மக்கள் பட்டினியை சந்திக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பால் மா இல்லாது ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயாளர்களும் பெரும் அவலங்களை சந்தித்து வருகின்றனர்.

பொது மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களும் எறிகணைத் தாக்குதல்களும் இலங்கை ஆயுதப்படைகளால் மேற்கொள்ளப்படுவதனால் பல பொதுமக்கள் நாளாந்தம் கொல்லப்பட்ட வண்ணம் உள்ளனர். இன்றய தினம் இலங்கை இராணுவத்தினர் வட்டக்கச்சி, தருமபுரம் பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து நடாத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன். பதினைந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தருமபுரம் வைத்தியசாலையில் இருந்து 75மீற்றர் தூரத்தில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் பெரும் அவலப்பட்டு ஒட வேண்டியநிலை ஏற்பட்டது. வன்னியில் உள்ள மக்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்காகவே இவ்வாறான தாக்குதல்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது.

மக்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கு அரசு மருந்து மற்றும் உணவுப் பொருட்களை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது. இலங்கை அரசியல் அமைப்பை மட்டுமல்ல ஐ.நா மனித உரிமைகள் சாசனம் மற்றும் சர்வதேச போர் நெறிமுறைகளையும் மீறும் வகையில் சொந்த நாட்டு மக்கள் மீது இலங்கை அரசு இனப்படுகொலை புரிந்து வருகின்றது.

1.மூடப்பட்டபாதையை உடன் திறப்பதற்கும்,
2.உணவு நிவாரணம் மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பிவைப்பதற்கும்,
3.படுகொலைகளை தடுத்து நிறுத்தவும்
ஆவன செய்யும்படி மிகவும் அவசரமாகவும் உருக்கமாகவும் வேண்டுகின்றேன். என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.