ஊடக அடக்கு முறையை எதிர்த்து இன்று கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணி

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்தும் ஊடக சுதந்திரத்தை அடக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரியும் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தின் அருகே இன்று நண்பகல் 12.15 மணியளவில் அனைத்து ஊடகவியலாளர் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தின.
பேரணியின் போது பதாதைகளைத் தாங்கியவாறு ‘ஊடகங்களுக்கு எதிரான பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்’ போன்ற கோஷங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் எழுப்பப்பட்டன.அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கறுப்புப் பட்டி அணிந்து காணப்பட்டனர்.

சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உட்பட ஐந்து ஊடக அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி லேக் ஹவுஸ் அரச பத்திரிகை நிறுவனத்திற்கு முன்பாக நடைபெற்றது.

ஊடகவியலாளர்கள் படுகொலை, ஊடக நிறுவனங்கள் குண்டர்களால் தாக்கப்படுகின்றன, ஊடக அமைச்சு பொறுப்பை அரச தலைவர் தன்வசப்படுத்தியது ஏன் என்று உரக்க சத்தமிட்டு இந்த கொலைகளை செய்யவா என்ற முழக்கங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் எழுப்பப்பட்டன. அத்துடன் மகிந்த அரசு கிட்லர் ஆட்சி நடத்துவதாகவும் கூறி ஒரே குரலில் முழக்கமிட்டனர்.அத்துடன் படையினரே லசந்தவை சுட்டுக் கொன்றது என்று உரக்கச் சத்தமிட்டனர்.

அதற்கிடையே மகிந்த ராஜபக்ச போன்று வேடம் தரித்து முகத்தை கறுப்புத் துணியால் மூடியவாறு கையில் துப்பாக்கியுடன் அங்கு திடீரென வந்த நபர் ஒருவர் ஊடகவியலாளர்களை எச்சரிக்கை செய்வது போல பாவனை செய்தார். அத்துடன் கையை உயர்த்தி துப்பாக்கியால் ஊடகவியலாளர்களை சுடுவது போலவும் அந்த நபர் காட்சியளித்தார்.ஆர்ப்பாட்டப் பேரணியின் இறுதியில் கண்டனக் கூட்டமும் நடைபெற்றது.

அன்று நிமலராஜன் நடேசன், சிவராம் இன்று லசந்த நாளை யார் என்று கேள்வி கேட்டும் முழக்கமிட்ட ஆர்ப்பட்டக்காரர்கள் இதுவரை காலமும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்குதலுக்குள்ளான ஊடக நிறுவனங்களின் விபரங்கள் அடங்கிய வாசக அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.

இதனிடையே பாதுகாப்பு நடவடிக்கைகளும் அங்கு பலப்படுத்தப்பட்டிருந்தன. கலகத் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் உட்பட பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த பலர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எனினும் எதுவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

ஆர்ப்பாட்ட பேரணியில் ஊடகவியலாளர்களுடன் இணைந்து அரசியல் பிரமுகர்கள், பொதுநல அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.