வன்னியில் உயிருக்கு உத்தரவாதமின்றி வெட்ட வெளியில் 3 இலட்சம் தமிழர்கள் அவலம்: தமிழகம் சென்ற அகதிகள் தெரிவிப்பு

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அந்நாட்டு இராணுவத்திற்கும் நடக்கும் கடும் போரால் கிளிநொச்சி, முல்லைத்தீவிற்கு இடையே இடம் பெயர்ந்த 3 இலட்சம் தமிழர்கள், உயிருக்கு எவ்வித உத்தரவாதமும் இன்றி வெட்ட வெளியில் தங்கியிருந்து அவலப்படுவதாக, தனுஷ்கோடிக்கு புதன்கிழமை வந்த அகதிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியை இலங்கை இராணுவம் கைப்பற்றியதால், அங்கிருந்து வெளியேறி முல்லைத்தீவில் விடுதலைப் புலிகள் பதுங்கியிருக்கலாம் எனக் கருதி, இலங்கை இராணுவம் அங்கு தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கிளிநொச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்துவந்த 3 இலட்சம் தமிழர்கள் அங்கிருந்து வெளியேறி வெட்ட வெளியில் தங்கியிருப்பதாகத் தெரியவருகிறது.

இதற்கிடையே கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா பகுதியைச் சேர்ந்த 10 ஆண்கள், 9 பெண்கள், 8 சிறுவர், சிறுமியர் ஆகிய 27 பேர், இரு படகுகளில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு நேற்று புதன்கிழமை வந்தனர்.

அப்போது அகதிகள் கூறியதாவது, தமிழர்கள் யாரும் தற்போது கிளிநொச்சியில் இல்லை. அவ்வூரில் உள்ள பள்ளிக் கட்டடங்கள், தண்ணீர்த் தொட்டி, மின்சார டிரான்ஸ்பார்மர், வீடுகள் போரால் உருக்குலைந்து விட்டன.

கிளிநொச்சியை சுற்றி வசித்த 3 இலட்சம் தமிழர்கள் அங்கிருந்து வெளியேறி, முல்லைத்தீவு செல்லும் வழியான பிரமந்தன், புளியம்பொக்கணை, புதுகுடியிருப்பு, விஸ்வமடு, ஒட்டுசுட்டான் பகுதிகளில் கடுங்குளிரிலும், வெயிலிலும் வெட்டவெளியில் தங்கியிருக்கின்றனர்.

கடந்த மாதம் பெய்த மழையால் மலேரியா, வாந்தி போன்ற பாதிப்பு பலருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்துவந்த அரிசி, பருப்பு, எண்ணெய், துணிகள்தான் இலங்கைத் தமிழர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதல்.

வீடுகள், உடமைகளை இழந்து வெட்ட வெளியில் தங்கியுள்ளதால், இலங்கை இராணுவத்தின் குண்டுகள் எப்போது, எங்கே விழும் எனத் தெரியாததால் தமிழர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.

Source   &   Thanks :  tamilwin

Leave a Reply

Your email address will not be published.