மோசமாகிறது நிலைமை: நாளை முதல் பால்-தண்ணீர் லாரிகள் ஓடாது

சென்னை: இன்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் குடிநீர், பால், மருந்து உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் லாரிகளும் வேலைநிறுத்தத்தி்ல் ஈடுபடவிருப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதால் நிலைமை மேலும மோசமடையவுள்ளது.

நாட்டை உலுக்கி எடுத்து வருகிறது லாரி ஸ்டிரைக். பல நூற்றுக்கணக்கான கோடி பெருமானமுள்ள பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. பெட்ரோல், டீசல் சுத்தமாக கிடைக்கவில்லை. காஸ் சிலிண்டர்களும் சுத்தமாக நின்று போய் விட்டன. கிட்டத்தட்ட இயல்பு நிலை முடங்கிக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஒரேயடியாக மூச்சை நிறுத்தும் வகையில், பால், குடிநீர், மருந்து லாரிகளும் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுகுமார் கூறுகையில், கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். லாரி உரிமையாளர்கள் அனைவரும் பேச்சுவார்த்தைக்காக டெல்லியில் காத்து இருக்கிறோம். ஆனால் மத்திய அரசு எங்களை கண்டு கொள்ளவில்லை.

லாரி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு சுமூக தீர்வுகாண வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் முதல்-அமைச்சரின் வேண்டுகோளுக்கு மத்திய அரசு இதுவரை மதிப்பளிக்காதது வேதனை அளிக்கிறது.

லாரி உரிமையாளர்கள் அனைவரும் ஒரு வருடத்திற்கு ரூ.2 லட்சம் வரை சுங்கவரி கட்டிவருகிறார்கள். இப்படிப்பட்ட லாரி உரிமையாளர்களை எஸ்மா சட்டத்தை காட்டி மிரட்டுகிறார்கள்.

எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்தால் சிறை செல்ல தயாராக இருக்கிறோம். டெல்லி மும்பையில் 5 ஆயிரம் லாரி உரிமம் பெர்மிட்களை லாரி உரிமையாளர்கள் சரண்டர் செய்துவிட்டனர். தமிழ்நாட்டில் இன்னும் 2 நாட்களில் லாரி உரிமம் பெர்மிட்களை சரண்டர் செய்து விடுவோம்.

லாரிகள் வேலை நிறுத்தத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க மத்திய அரசு முன்வரவேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து, தண்ணீர் ஏற்றிச்செல்லும் 5 ஆயிரம் லாரிகள் சனிக்கிழமை முதல் ஓடாது. எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்து நீடிக்கும் என்றார் அவர்.

67 பேர் டிஸ்மிஸ்

இதற்கிடையே, ஸ்டிரைக்கில் குதித்துள்ள எண்ணை நிறுவன அதிகாரிகள் 67 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். 4 மாநிலங்களில் எஸ்மா சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

எண்ணை நிறுவன அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த 55 ஆயிரம் பேர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டு வர பெட்ரோலிய மந்திரி முரளி தியோரா விரும்பினார். நேற்று முன்தினம் இரவு அவர் எண்ணை நிறுவன அதிகாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த இரண்டரை மணி நேரம் காத்திருந்தார். ஆனால் சங்க பிரதிநிதிகள் யாரும் வராததால் அவர் திரும்பிச் சென்றார்.

இதற்கிடையே, நேற்று சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இது தோல்வியில் முடிவடைந்தது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் சர்தக் பெகுரியா கூறுகையில், எண்ணை நிறுவன அதிகாரிகள் தங்கள் கோரிக்கையில் பிடிவாதமாக இருப்பதால், பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவர்களின் கோரிக்கையை உயர்மட்ட அமைச்சக குழு பரிசீலிப்பதால், எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று சொன்னோம். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை என்றார்.

வேலை நிறுத்தத்தை முறியடிக்க எண்ணை நிறுவன நிர்வாகம், கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. வேலை நிறுத்தம் தொடர்பாக, நேற்று முன்தினம் 17 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று 67 அதிகாரிகள் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து பெட்ரோலிய செயலாளர் ஆர்.எஸ்.பாண்டே கூறுகையில், எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி.) தனது 64 அதிகாரிகளையும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தனது 3 அதிகாரிகளையும் டிஸ்மிஸ் செய்துள்ளது. நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 2 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது, மற்ற ஊழியர்களையும் பணிக்குத் திரும்ப ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்றார்.

வேலை நிறுத்தத்தை முறியடிக்க, மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டமான எஸ்மா அமல்படுத்தப்பட்டு உள்ளது

Source   &   Thanks :  thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.