இன்று கைதாகிறார் ராமலிங்க ராஜு?

ஹைதராபாத்: இந்திய ஐடி சந்தையையே புரட்டிப் போட்டுவிட்ட சத்யம் நிறுவனத்தின் தலைவர் பி.ராமலிங்க ராஜூ இன்று கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

53,000 தொழிலாளர்களுடன் 66 நாடுகளில் கிளைபரப்பி நிற்கும் நாட்டின் சத்யம் நிறுவனத்தில் அதன் தலைவர் ராமலிங்க ராஜூ, நிர்வாக இயக்குநரும் அவர் தம்பியுமான ராம ராஜூ ஆகியோர் நடத்தியுள்ள நிதி மோசடிகள், இவர்களை உலகின் மிக கருணையற்ற மனிதர்கள் பட்டியலில் மீடியா சேர்க்கும் அளவுக்குச் செய்துவிட்டன.

இப்போது ராமலிங்க ராஜூவின் மோசடிகள் இத்தோடு நின்றுவிட்டனவா… இன்னும் எவ்வளவு தூரத்துக்குச் சென்றுள்ளன என்று விசாரிக்கும் பணியில் பல குற்றப் புலவனாய்வு ஏஜென்ஸிகளும் களத்தில் இறங்கியுள்ளன. அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமும் இதில் கைகோர்த்துக் கொண்டுள்ளது.

ராஜூ செய்துள்ள மோசடிகள் நிச்சயம் வரலாறு காணாத ஒன்றுதான். எனவே அவருக்கு குறைந்தது 10 ஆண்டு தண்டனை நிச்சயம் என்கிறது செபி.

இந் நிலையில் ராஜூ அமெரிக்காவுக்குத் தப்பி விட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரது வக்கீல், ‘ராமலிங்க ராஜு எங்கும் ஓடவில்லை. இந்தியாவில், ஹைதராபாத்தில்தான் இருக்கிறார்’ என நேற்று மாலை அறிவித்தார்.

உடனே ராஜுவைக் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.

குறிப்பாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு இதுகுறித்து பல மட்டத்திலிருந்தும் நெருக்கடி முற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே இன்று மாலைக்குள் ராஜு கைது செய்யப்படக் கூடும் என ஆந்திர போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.