இனி பிழைக்குமா ஈழத் தமிழினம்? – ரவிக்குமார் எம்.எல்.ஏ.

‘இலங்கைப் போர் முனையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது?’ என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது! புலிகளின் நிர்வாகத் தலைமையிடமாகச் செயல்பட்டு வந்த கிளிநொச்சி, இவ்வளவு சீக்கிரம் வீழ்ந்துவிடுமென இலங்கை அரசே கூட எதிர்பார்க்கவில்லை. இலங்கை ராணுவத்தின் பிடிக்கு கிளிநொச்சி வருவதற்கு முன்பு வரை அங்கே கடுமையான யுத்தம் நடந்துகொண்டிருந்தது. சிங்களப் படையினர் பலர் கொல்லப்பட்டு ஏராளமானோர் காயமடைந்திருந்தார்கள். இலங்கை ராணுவம் மரணக் கண்ணிக்குள் சிக்கிக் கொண்டுவிட்டதாக ராணுவ நோக்கர்கள் கருத்து தெரிவித்துவந்தார்கள். ஆனால், எவரும் எதிர்பார்க்காத விதமாக கிளிநொச்சியை புலிகள் காலி செய்துவிட்டு பின்வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.

கிளிநொச்சியைத் தொடர்ந்து ஆனை யிறவை நோக்கி இலங்கை ராணுவம் முன்னேறுகிறது. அடுத்து இருப்பது முல்லைத் தீவு மட்டும்தான். ஆனையிறவையும், முல்லைத்தீவுக்கு செல்லும் பாதையையும் பாதுகாக்கிற நடவடிக்கையிலும்கூட புலிகள் நாட்டம் காட்டவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஒப்பீட்டளவில் பார்க்கும் போது புலிகளுக்கு கிளிநொச்சியைவிட முல்லைத்தீவு அவ்வளவு பாதுகாப்பான தல்ல. கிளிநொச்சியில் செய்திருந்தது போல், அங்கே

அவர்கள் நீண்ட யுத்தத்தை நடத்துவதற்கு ஏற்ற பாதுகாப்பு அரண்களையும் ஏற்படுத்தி வைக்கவில்லை என்று ராணுவ நோக்கர்கள் கூறுகின்றனர். தற்போது கடற்புலிகளின் வலிமையும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், ‘இன்னும் எவ்வளவு நாட்களுக்கு முல்லைத்தீவை புலிகள் பாதுகாக்க முடியும்?’ என்ற ஐயம் பரவலாக எழுந்துள்ளது. அவர்கள் கிரமமான யுத்தத்தை நடத் துவதிலிருந்து கெரில்லா யுத்த முறைக்கு மாறிச் செல்வதைத் தவிர, வேறு வழியெதுவும் இல்லை என்பதாக கருத்துகள் வெளி யாகின்றன.

இரண்டு வாரங் களுக்கு முன்னால் கிளிநொச்சி களமுனையில் ஏராளமானசிங்கள ராணுவத்தினர் கொல்லப் பட்ட நேரத்தில் ராஜபக்ஷே அரசாங்கத்தை, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அதிபருமான ரனில் விக்ரமசிங்கே, கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால், இன்று இலங்கை ராணுவம் அடைந்திருக்கும் வெற்றியைப் பார்த்து திகைத்துப் போன அவர், புலிகளை பலவீனப்படுத்தியது தான்தான் என்றும், இப்போது ராஜபக்ஷே அடைந்திருக்கும் வெற்றிக்கு அடித்தளமிட்டது தனது ஆட்சிக் காலத்தில்தான் என்றும் பேசத்தொடங்கி விட்டார். ராஜபக்ஷேயின் ஆதரவாளர்கள் இலங்கை வீதிகளில் பட்டாசு வெடித்து இந்த ராணுவ வெற்றியைக் கொண்டாடியிருக்கிறார்கள். கிளிநொச்சியை கைப்பற்றிய உற்சாகத்தில் மிதந்து கொண்டிருக்கும் இலங்கை ராணுவத் தளபதியோ, ‘இன்னும் ஆறே மாதங்களில் புலிகளை முற்றாக அழித்துவிடுவோம்!’ என்று கொக்கரித்திருக்கிறார். யுத்த முனையில் ஈட்டிய வெற்றியை அரசியல் அரங்கில் விரிவுபடுத்தும் விதமாக கூடிய விரைவிலேயே தேர் தலை ராஜபக்ஷே அரசு நடத்தும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.

புலிகளை ஆதரித்து எழுதும் இணைய தளங்கள்கூட தற்போது கிளிநொச்சியை எதற்காக புலிகள் விட்டுக்கொடுத்தார்கள் என்பது பற்றி விளக்கம் சொல்ல முடியாமல் தவிக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து தற்காப்பு யுத்தத்தையே புலிகள் நடத்தி வருகிறார்கள். சிங்களப் படைகள் மீது மிகப்பெரும் தாக்குதல் எதையும் அவர்களால் நடத்தமுடியவில்லை. அதற்கான வாய்ப்பை இலங்கை ராணுவம், புலிகளுக்கு வழங்கவில்லை. இதனால் தமது கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை அடுத்தடுத்து புலிகள் இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. வடக்கு, கிழக்கு என புலிகளின் இழப்பு தொடர்கதையானது.

கிளிநொச்சி நகரை 1990-ம் ஆண்டு புலிகள் கைப்பற்றி னார்கள். அதன் பிறகு 1996 செப்டம்பரில் சிங்கள ராணுவம் அதைப் பிடித்தது. ஆனால், ‘ஓயாத அலைகள்’ என்ற மாபெரும் தாக்குதலை நடத்தி 1998 செப்டம்பரில் கிளிநொச்சியை புலிகள் மீட்டார்கள். ‘ஒரு யுத்தத்தில் ஒரு இடத்தை இழப்பதும், பிடிப்பதும் பெரிய விஷயமல்ல. கடந்த காலங்களில் செய்ததுபோல மீண்டும் புலிகள் தாம் இழந்த பகுதிகளை மீட்டெடுப்பார்கள்!’ என்று ஈழத்தமிழர்கள் கூறிவருகின்றனர். தொடர்ச்சியாக இலங்கை யுத்தத்தை அவதானித்து வருகிற ராணுவ நோக்கர்களோ… இந்த முறை அவ்வளவு எளிதாக புலிகள் தாம் இழந்த பகுதிகளை மீட்கமுடியாது என்கின்றனர். 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ல் அமெரிக்காவில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, உலக நாடுகளின் அபிப்பிராயம் பெருமளவில் மாறிவிட்டது என்பதை அதற்கான காரணங்களில் ஒன்றாக அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ”செப்டம்பர் 11-க்கு முன்புவரை ஒடுக்கப்படுகிற மக்கள் வேறு எந்த வழியும் இல்லாத நிலையில், வன்முறையின் மூலம் தம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்துவதை உலக சமூகம் ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனால், அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பயங்கரவாதத்துக்கும், எதிர்ப்புப் போராட்டத்துக்குமான இடைவெளியைத் தகர்த்துவிட்டது. இப்போது உலக நாடுகளைப் பொறுத்தவரை புலிகள் இயக்கம் என்பது பயங்கரவாத இயக்கங்களுள் ஒன்று தான்!” என பி.ராமன் கூறியிருப்பது கவனிக்கத் தக்கதாகும்.

கியூபாவில் புரட்சி வெற்றிபெற்று ஐம்பது ஆண்டுகள் நிறைவடைவதை அந்நாடு, சில நாட்களுக்கு முன்னால் கொண்டாடியிருக்கிறது. கியூபா புரட்சியின் வெற்றி பல நாடுகளில் தேசிய இன விடுதலைப் போராட்டங்களுக்கு உத்வேகமாக அமைந்தது என்பதை நாம் அறிவோம். ஈழப் போராளிகளும்கூட அதன் தாக்கத்துக்கு ஆளான வர்கள்தான். கியூபாவின் புரட்சியை ஆராய்ந்த ரெஜி டெப்ரே என்ற சிந்தனையாளர், கியூபா புரட்சி லத்தீன் – அமெரிக்க நாடுகளுக்கு வழங்கிய கொடைகள் எவையென்பதை ‘புரட்சிக்குள் புரட்சி?’ என்ற தன்னு டைய நூலில் விவரித்துள்ளார். ‘எதிர்காலத்தில் புரட்சியை நடத்த வேண்டுமென்றால், ராணுவ அமைப்பைத்தான் உருவாக்க வேண்டும். அரசியல் அமைப்பை அல்ல. அரசியல் இயக்கம் ஒன்று, ராணுவ இயக்கமாக ஒருபோதும் மாறமுடியாது. ஆனால், ராணுவ அமைப்போ எப்போது வேண்டுமானாலும், ஓர் அரசியல் இயக்கமாக உருமாறிக்கொள்ள முடியும்!” என்ற டெப்ரேவின் கருத்து ஈழப்போராளிகள் மீதும் செல்வாக்கு செலுத்தியிருப்பதை நாம் உணரமுடியும். அதனால்தான் அவர்கள் அரசியல் இயக்கம் எதையும் உருவாக்கிக் கொள்ளவில்லை. ரெஜி டெப்ரேவின் இந்த கருத்தாக்கம் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் செல்லுபடியாகக் கூடியதுதானா? என்பதை எந்தவொரு தேசிய இன விடுதலை இயக்கமும் மறுபரிசீலனை செய்ய வில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அரசியல் இயக்கம் ஒன்று இல்லாத நிலையில் தம்முடைய போராட்டத்தின் நியாயங்களை உலக சமூகத்திடம் எடுத்துச்சொல்வதற்கான வழி அடைபட்டு விடுகிறது. கியூபா போராட்டத்தின்போது அந்தப் பணியை செய் வதற்கு ஏராளமான அறிவுஜீவிகள் இருந்தார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தைப் பற்றி பேசுவதற்கு எட்வர்ட் செய்த் என்ற மாபெரும் சிந்தனையாளர் இருந்தார். ஆனால், இன்று… ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசுவதற்கு உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு ஆளுமையும் இல்லையென்பது சோகமான ஒரு விஷயமாகும்.

பயங்கரவாதத்துக்கும், ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் இடையிலான வித்தியா சங்களை அழிப்பவர்கள் பயங்கரவாதிகள் மட்டுமல்ல. போராளிகளும்கூடத்தான். அடிப்படை வாதத்துக்கும், விடுதலைக்கருத்தியலுக்கும் இடையிலான வேறுபாடும்கூட அண்மைக் காலங் களில் வேகமாக மறைந்து வருகிறது. மதத்தை அடிப்படையாகக் கொண்ட பயங்கரவாதம் என்பது விடுதலை என்ற சொல்லை கவர்ந்து கொண்டபோது, உண்மையான விடுதலை இயக்கங் கள் அதை எதிர்த்து ஏதும் செய்யமுடியாத சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டன. இரண்டின் மொழியும் ஒன்றுபோலவே தோற்றம் தருவதால் மக்களின் மனநிலையும்கூட குழம்ப ஆரம்பித்தது. இவையெல்லாம் விடுதலை இயக்கங்கள் தீவிரமாக பரிசீலிக்கவேண்டிய பிரச்னைகளாகும். ஆனால், இவற்றை எவருமே கணக்கிலெடுத்துக் கொண்ட தாகத் தெரியவில்லை.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் பெற் றுள்ள வெற்றிகளால் சிங்கள அரசு துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசின் உற்சாகத்தைப் பகிர்ந்துகொள்வது போல இந்தியாவை ஆளும் காங்கிரஸ§ம் கருத்து தெரி வித்துள்ளது. தாங்கள் இலங்கை அரசைத்தான் ஆதரிக்கிறோம் எனவும், ஒருவேளை பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டால், அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டு மென்றும், காங்கிரஸ் இயக்கத்தின் வீரப்பமொய்லி கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரியில் உரிமை கோருகிற தமிழர்களின் மீது தனக்கிருக்கும் கோபத்தை வீரப்பமொய்லி இப்படி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாரோ என்னவோ? தமிழக முதல்வர் இது குறித்து உடனடியாகக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், இலங்கையில் நடக்கும் போரில் காயமடைந்த தமிழர்கள் எவரும் தமிழ்நாட்டுக்குள் வந்துவிடாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகத் தமிழகக் காவல்துறை அதிகாரிகள் சிலர் கூறியுள் ளார்கள்.

தமிழக முதல்வர் தலைமையில் அனைத் துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு டெல்லியில் இந்திய பிரதமரை சந்தித்து முறையிட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. அண்மையில் கூடிய தி.மு.க. பொதுக்குழுவிலும்கூட இது பற்றி தமிழக முதல்வர் உருக்கமாகப் பேசி யிருந்தார். ஆனாலும்கூட, பிரதமர் மன்மோகன்சிங் தமிழக முதல் வரிடம் வாக்குறுதி அளித்தபடி வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்கவில்லை. ஒருவேளை அங்குள்ள தமிழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு அதன் பிறகு நடக்கும் வெற்றிவிழாவுக்கு அனுப்பலாம் என பிரதமர் எண்ணிக் கொண்டிருக்கிறாரோ, என்னவோ… தெரியவில்லை!

தக்கவைத்துக் கொள்வதற்கு தி.மு.க. உறுப்பினர்களின் ஆதரவு காங்கிரஸ§க்குத் தேவையில்லை. ஒருவேளை தி.மு.க. தனது ஆதரவை விலக்கிக்கொண்டால்கூட ஆட்சி கவிழ்ந்துவிடப் போவதில்லை. காபந்து சர்க் காராக காங்கிரஸ் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியும். ஆனால், தமிழ் நாட்டிலோ காங்கி ரஸின் உதவியில்லாமல் ஆட்சியைத் தொடர முடியாத இக்கட்டில் தி.மு.க. உள்ளது. எனவே, இங்கே கொஞ்சம் கொஞ்சமாக… காங்கிரஸின் பிடி இறுகும் என்பது பாமரனுக்கும் புரிகிற அரசியல் உண்மையாகும். இந்தச் சூழலில், ‘ஈழப் பிரச்னையில் முன்புபோல தீவிரமாக தமிழக முதல்வர் பேசுவாரா?’ என்ற ஐயத்தை சிலர் எழுப்புகின்றனர். ‘தமிழர்களுக்காக உயிரையும்கூட இழக்கத் தயார்’ என்று தி.மு.க. பொதுக்குழுவில் முதல்வர் பேசியிருப்பது வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை அவருடைய அரசியல் வாழ்வை ஊன்றி கவனிப்பவர்கள் உணர்வார்கள்.

கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்தவர் களும், போரால் பாதிக்கப்பட்டு உள்நாட் டிலேயே அகதிகளானவர்களும் இப்போது முல்லைத் தீவில்தான் தஞ்சம் புகுந்திருக் கிறார்கள். சிங்கள விமானப்படை வீசும் ஒவ்வொரு குண்டும் இனிமேல் குறைந்தது பத்து தமிழர்களின் உயிர்களையாவது பலி வாங்கும் என்பது உறுதி. இவ்வளவு காலமும் நடந்ததைவிடவும், மிகப்பெரிய மனித அவலம் இனிமேல் நடக்கப்போகிறது. ஈழத் தமிழினம் முற்றாக அழியப்போகிறது. புலிகளை ஒடுக்குவதற்காக சிங்கள அரசால் துருப்புச் சீட்டுகளாக பயன்படுத்தப்படும் துரோகக் கும்பலும் இனி பிழைத்திருக்க முடியாது. ஏனென்றால், புலிகள் வீழ்ந்துவிட்டால், துரோகி களின் தேவை முடிந்து விடும். அவர்களையும் சிங்கள இனவெறி விட்டு வைக்காது.

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராஜராஜ சோழன் இலங்கைமீது படை எடுத்துச் சென்று சிங்கள கொட்டத்தை அடக்கி, தமிழரின் வீரத்தை நிலைநாட்டினான். ராஜேந்திர சோழனும் அந்த மானத்தைக் காத்தான். தமிழரின் மானம் வீரமும் பழங்கதைதானா? ஈழத்தமிழினம் அழிய வேண்டியதுதானா? தமிழக மக்கள் இப்போதும் மௌனம் காப்பது நியாயமானதுதானா?

Source & Thanks : yarl.com

Leave a Reply

Your email address will not be published.