வன்னி ஆர்ட்டில்லரி தாக்குதலில் 7 தமிழர்கள் பலி

வன்னி: வன்னியில் உள்ள தர்மபாபுரம் மற்றும் வடக்காச்சி ஆகிய பகுதிகளில் இலங்கை ராணுவம் நடத்திய ஆர்ட்டில்லரி தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். ஏராளமான குழந்தைகள் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். அனைவரும் தங்களது சொந்த வீடுகளை விட்டு இடம் பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள் ஆவர்.

தர்மாபுரம் ஜங்ஷன் பகுதியில் நடந்த தாக்குதலில் 4 பேரும், வடக்காச்சியில் நடந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 3 பேரும் கொல்லப்பட்டனர்.

தர்மாபுரம் ஜங்ஷன் பகுதியில் நடந்த தாக்குதலில் காயமடைந்தோர் அங்கிருந்து 75 மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காயமைடந்தவர்கள் ரத்தக் காயத்துடன் துடிதுடித்ததைப் பார்த்து அவர்களது உறவினர்களும், குடும்பத்தினர் கதறி அழுததால் மருத்துவமனையே சோக மயமாக காணப்பட்டது.

தர்மாபுரம் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் தர்சா யோகன், நாச்சிப்பிள்ளை பாலநாயகம் ஆகியோர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு சிறுவன் மற்றும் இன்னொருவரின் அடையாளம் தெரியவில்லை.

வடக்காச்சியில், உயிரிழந்தவர்களில் சசிகரன் சுடர்நிலவன் என்ற 11 மாதக் கைக்குழந்தையும் அடக்கம். மற்ற இருவர் 20 வயது பெண் பிரதீபா கிருஷ்ணகுமார் மற்றும் 45 வயது கமலா ஆகியோர் ஆவர்.

தர்மாபுரத்தில் 13 பேரும், வடக்காச்சியில், 13 பேரும் காயமடைந்தனர்.

இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வட்டுவாகல் பகுதி பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களின் டிராக்டர் எரிந்து சாம்பலானது. ஒருவர் காயமடைந்தார்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.