ராகுல் விரைவில் பிரதமராவார்-பிரணாப் முகர்ஜி

சென்னை: வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிருத்தலாம் எனத் தெரிகிறது.

சென்னையில் வெளிநாட்டு இந்தியர் மாநாட்டில் பங்கேற்க வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி `இந்தியா ஒரு உருவாகி வரும் சக்தி’ என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டு இந்தியர்கள் பலர் அவரிடம் கேள்விகள் கேட்டனர். அப்போது ஒருவர், இந்தியாவை வழி நடத்திச் செல்ல இங்கு இளைய தலைமுறையினர் இல்லையா? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த பிரணாப்,

38 வயதில் ஒமர் அப்துல்லா காஷ்மீர் முதல்வராகிவிட்டார். அவரை விட இளம் வயதில் பிரபுல்ல குமார் மகந்தா அஸ்ஸாம் முதல்வரானார். அப்போது அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அதே போல ராஜிவ் காந்தியும் 40 வயதில் பிரதமரானார்.

அந்த வரிசையில் ராகுலும் பிரதமராகும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்றார்.

இதன்மூலம் வரும் மக்களவைத் தேர்தலில் மன்மோகன் சிங்கை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்காது என்று தெரிகிறது. ராகுலை முன்னிருத்தி தேர்தலை அந்தக் கட்சி சந்திக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில்,

பாஜகவில் அத்வானியும் பைரோன் சிங் ஷெகாவத்தும் பிரதமர் பதவி யாருக்கு என்பதில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் 70 சதவீதம் பேர் இளைஞர்களாக இருக்கும் நிலையில், இந்த இரு முதிய தலைவர்களும் ஒருவரோடு ஒருவர் இப்போதே சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். தேர்தலில் பாஜக வெல்லப் போவதில்லை, இருந்தாலும் பிரதமர் பதவிக்கு சண்டை ஆரம்பித்துவிட்டது.

இந் நிலையில் காங்கிரஸ் ராகுலை முன்னிறுத்தினால் அதில் தவறே இல்லை. மக்களவைத் தேர்தலில் காங்கிரசின் முகமாக ராகுல் இருப்பார் என்றார்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.