திருமங்கலத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது – பலத்த பாதுகாப்பு

திருமங்கலம்: திருமங்கலம் சட்டசபைத் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தொகுதி முழுவதும் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமங்கலம் தொகுதி சட்டசபை உறுப்பினர் வீர. இளவரசனின் மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து திமுக சார்பில் லதா அதியமான், அதிமுக சார்பில் முத்துராமலிங்கம், தேமுதிக சார்பில் தனப்பாண்டியன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். மொத்தம் 26 பேர் களத்தில் உள்ளனர்.

டிசம்பர் 15ம் தேதி பிரசாரம் தொடங்கியது. தொடக்கம் முதலே சினிமாவைப் போன்று அதிரடி நிகழ்வுகளுடன் நடந்து வந்த பிரசாரம், ஜனவரி 7ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.

வாக்காளர்கள் ஆர்வம் ..

இதையடுத்து இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவின்போது ஏராளமான வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களிக்க ஆரம்பித்தனர். மாலை 5 மணி வரை வாக்குகளைப் பதிவு செய்யலாம்.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக அனைத்துக் கட்சி பூத் ஏஜென்டுகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைக் கொண்டு வந்து வைத்த வாக்குச்சாவடி அதிகாரிகள், ஒவ்வொரு வேட்பாளரின் பெயருக்கு முன்பு உள்ள பொத்தானையும் அழுத்தி மாதிரி வாக்குப்பதிவை நடத்திக் காட்டினர்.

அனைத்து பூத் ஏஜென்டுகளும் திருப்தி தெரிவித்த பின்னரே அந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவுக்கு வைக்கப்பட்டன.

26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இரண்டு மின்னணு இயந்திரங்கள் வைக்கப்படுகிறது. மொத்தமுள்ள 190 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்கள் துணை ராணுவத்தினர், காவல்துறை உதவியுடன் கொண்டு செல்லப்பட்டது.

105 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ..

190 வாக்குச்சாவடி களில் 105 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், தவிர 130 தேர்தல் சிறப்பு பார்வையாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குப்பதிவின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வாக்குச்சாவடிகளில் வீடியோ படமெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,55,647 ஆகும். இதில் ஆண்கள்-76,726, பெண்கள்-78,921.

12 கம்பெனி பாதுகாப்புப் படையினர் ..

எட்டு கம்பெனிகள் துணை ராணுவம், 4 கம்பெனிகள் சிஆர்பிஎப் காவல் துறையினரும் பாதுகாப்பிற்காக வந்திறங்கியுள்ளனர். தவிர தமிழக காவல்துறையினர் 2,700 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

12ம் தேதி வாக்கு எண்ணிக்கை ..

வாக்கு எண்ணிக்கை வருகிற ஜன.12ம் தேதி மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

லதா, பத்மநாபன் வாக்களித்தனர்:

திமுக வேட்பாளர் லதா அதியமான், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பத்மநாபன் ஆகியோர் அல் அமீன் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.

லதா அதியமான் முதல் நபராக வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். வெற்றிக்கனியை முதல்வர் காலடியில் சமர்ப்பிப்பேன் என்றார்.

கலெக்டர் ஆய்வு:

முன்னதாக வாக்குச் சாவடிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சீதாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. எந்தவிதப் பிரச்சினையும் இதுவரை இல்லை.

பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தொகுதியில் வெளியூர்க்காரர்கள் தங்கியிருப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நரேஷ் குப்தா முகாம்:

தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா திருமங்கலத்தில் முகாமிட்டுள்ளார். வாக்குப்பதிவு நடைபெறுவதை அவர் கண்காணித்து வருகிறார். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் அவர் நேரில் சென்று கண்காணிக்கிறார்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.