ஜல்லிக்கட்டை நிரந்தரமாக தடை செய்யக் கோரி வழக்கு

டெல்லி: ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு நிரந்தர தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பிராணிகள் நல வாரியம் வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டாக திகழ்ந்து வரும் ஜல்லிக்கட்டுக்கு கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டை நடத்துவோரும், அதில் பங்கேற்போரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

மக்களின் மனக் கொந்தளிப்பையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரி மனு செய்தது.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டை நடத்த இடைக்கால அனுமதியை வழங்கியது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பிராணிகள் நல வாரியம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், பொங்கல் சமயத்தில் கோர்ட் பிறப்பித்த நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.

காளை மாடுகளுக்கு ஒயின் போன்ற போதைப் பொருட்களை வலுக்கட்டாயமாக கொடுக்கின்றனர். மாடுகளின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவப்படுகிறது. மிகுந்த வலியுடன் மாடுகளை ஓட விட்டு சண்டையிட வைக்கிறார்கள். இது மனித தன்மையற்ற செயல் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை உடனடி வழக்கைக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரர் சார்பில் கோரப்பட்டது. ஆனால் அதை ஏற்க தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் மறுத்து விட்டது.

இருப்பினும் இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

Source  &  Thanks : aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.