பிரணாப் விரைவில் இலங்கை செல்வார்-மன்மோகன்

சென்னை: வெளிநாட்டு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி நேற்று இரவு சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக வெள்ள நிவாரண நிதி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

நேற்று இரவு சென்னை வந்த பிரதமரை, ஆளுநர் மாளிகையில், முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு..

முதல்வர் கருணாநிதி நேற்று இரவு ஆளுநர் மாளிகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.

இறுதியாக, இலங்கைப் பிரச்சினை குறித்து எடுத்துக் கூறி மத்திய அரசு ஏற்கனவே ஒப்புக் கொண்டவாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி எப்போது இலங்கைக்கு செல்கிறார் என்பது பற்றியும், இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்தும் கருணாநிதி எடுத்துக் கூறினார்.

முதல்வர் கருணாநிதியின் உணர்வைப் புரிந்து கொள்வதாகவும், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக பிரணாப் முகர்ஜியை அனுப்பி வைப்பதாகவும் முதல்வர் கருணாநிதியிடம் உறுதி அளித்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிவாரண நிதி …

இதுதவிர வெள்ள நிவாரண நிதியாக ரூ. 1000 கோடியை தமிழகத்திற்கு உடனடியாக ஒதுக்க வேண்டும் எனவும் பிரதமரிடம் முதல்வர் கருணாநிதி கோரிக்கை வைத்தார்.

விவசாயக் கடன் தள்ளுபடியால் ஏற்பட்ட மாநில அரசின் இழப்பை சரி கட்ட, 3 ஆயிரத்து 187 கோடியே 40 லட்சம் ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் அப்போது கோரிக்கை விடுத்தார்.

அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையத்தின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தர வேண்டும் என்றும் முதல்வர் கோரிக்கை வைத்தார்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.