விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இலங்கை மீண்டும் தடை

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இலங்கை அரசு மீண்டும் தடை விதித்துள்ளது. இதன் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை அது ஓங்கி அறைந்து சாத்தி விட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை படைகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. புலிகளின் தலைநகரான கிளிநொச்சியைப் பிடித்துள்ளனர். அடுத்து முல்லைத்தீவுக்கு குறி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் முன்வர வேண்டும் என அமெரிக்கா சமீபத்தில் இலங்கைக்கு அறிவுறுத்தியது. ஆனால் அதை நிராகரிக்கும் வகையில், தற்போது புலிகளுக்கு மீண்டும் தடை விதித்துள்ளது இலங்கை அரசு.

இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ளன. இலங்கையிலும் இந்தத் தடை முன்பு இருந்தது. பின்னர் நார்வே சமரசப் பேச்சுக்களைத் தொடர்ந்து தடை நீக்கப்பட்டது. தற்போது மீ்ண்டும் தடை அமலாகியுள்ளது.

புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கும் முடிவு, அதிபர் ராஜபக்சே தலைமையில் நேற்று இரவு கூட்டப்பட்ட அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்னர் பேசிய மூத்த அமைச்சர் மைத்ரிபாலா ஸ்ரீசேனா கூறுகையில், விடுதலைப் புலிகள் மக்களை கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால்அப்பாவி மக்களின் உயிர் பறி போகும் அபாயம் உள்ளது.

இதை கருத்தில் கொண்டே புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.