சத்யம் கம்ப்யூட்டர்சில் நடந்த ரூ.8,000 கோடி ‘மெகா’ மோசடி : தலைவர் ராஜினாமா

புதுடில்லி : முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான சத்யம் கம்ப்யூட்டர்சில், “மெகா மோசடி’ நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. கம்பெனியை பெரும் நெருக்கடியில் தள்ளிய அதன் மானேஜிங் டைரக்டர் ராமலிங்க ராஜூ ராஜினாமா செய்திருக்கிறார். இதன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது மட்டுமல்லாமல், 8,000 கோடி ரூபாய் மோசடி நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் முன்னணி நிறுவனம். 15 ஆயிரம் கோடி ரூபாய் ஆஸ்தி கொண்ட நிறுவனம். கடந்த சில நாட்களாகவே இதன் பங்குதாரர்கள் சலசலப்பை ஏற்படுத்தி வந்தனர். காரணம், இக்கம்பெனியின் மூலதனத்தை மாற்றும் நிர்வாக திட்டத்திற்கு பங்குதாரர்கள் ஏற்கவில்லை. கம்பெனி நிர்வாகம் செல்லும் தவறான போக்கு பெரிய அளவில் வர்த்தக உலகில் பேசப்பட்டது. இந்நிலையில், நேற்று சத்யம் ராமலிங்க ராஜூ எழுதிய கடிதம், பங்குச்சந்தை, “செபி’ மற்றும் மத்திய அரசின் கம்பெனி நிர்வாகத்துறை ஆகிய எல்லாவற்றையும் கலக்கிவிட்டது. இனி சத்யம் மட்டும் அல்ல, இம்மாதிரி கம்பெனிகளின் வருடாந்திர லாப, நஷ்டக் கணக்கில் காட்டப்படும் தகவல்களில் எவ்வளவு உண்மை என்ற கேள்வி எழும் அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடிதம்: ஏற்கனவே கம்பெனித் தலைவர் வாங்கிய நில உடைமை குறித்து சர்ச்சை ஓயாத சூழ்நிலையில், அடுத்ததாக கம்பெனி நிர்வாகிகள் கூட்டம் வரும் 10ம் தேதி நடக்க ஏற்பாடு செய்த நிலையில், தலைவர் ராமலிங்க ராஜூ நேற்று அதிரடியாக தான் செய்த தவறுகளை ஒப்புக் கொண்டு நிர்வாகிகளுக்குக் கடிதம் எழுதினார். அது சந்தையிலும், கம்பெனி வட்டாரத்திலும் பெரும் புயலைக் கிளப்பியது.

ராமலிங்க ராஜூ எழுதிய கடிதம்: கம்பெனியில் வரவு, செலவுக் கணக்கில் 24 சதவீத லாபம் வந்ததாகக் காட்டப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 2008 உடன் முடிவடைந்த காலத்திற்கு வருவாய் 2,700 கோடி ரூபாய் என்று காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை வருவாய் 2,212 கோடி ரூபாய் மட்டுமே. அதாவது, 3 சதவீத லாபம் மட்டுமே. அதனால், செயற்கையாக 588 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாக கணக்கில் காட்டப்பட்டிருக்கிறது. எனக்கு இம்மாதிரி செய்வது புலியின் மீது சவாரி செய்வது என்றும், புலி சாப்பிடாமல் எப்படி தப்பிப்பது என்றும் தெரியாமல் தொடர்ந்தது. இதைத் தவிர்க்கவும் முடியவில்லை. அத்துடன் கூடுதல் வருவாய் காட்டப்பட்டதால், அதிக அளவில் வர்த்தகம் செய்வதாகக் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு அதிலும் செலவு அதிகரித்தது. “மாயடாஸ்’ நிறுவனத்துடன், ஒப்பந்தம் வைத்து சமாளிக்க முயன்றதும் கடைசியில் நடக்கவில்லை. இந்த நடப்புகள் போர்டு உறுப்பினர்களுக்குத் தெரியாது. நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன். இத்தவறு நடந்ததால், நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு உட்படுத்திக் கொண்டு அதற்கேற்ற தண்டனையைப் பெறவும் தயார்.

மிகக்குறைந்த ஊழியர்களுடன் இந்த நிறுவனம் இன்று 53 ஆயிரம் பணியாளர்களுடன் இருக்கிறது. இந்த 20 ஆண்டுகாலத் தொடர்பு எனக்கு உண்டு. இனி பிரச்னைகளைச் சமாளித்து நடத்த எனக்கு அடுத்ததாக ராம் மைனாம்பட்டி பொறுப்பேற்று நிர்வகிப்பார். இவ்வாறு ராமலிங்க ராஜூ தன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். சத்யம் போர்டு உறுப்பினர் மட்டும் இன்றி “செபி’க்கும் இக்கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த ஐந்து பக்கக் கடிதம் வெளியானதும் நேற்று சந்தையில் சத்யம் பங்குகள் வீழ்ச்சி கண்டன. பங்குச் சந்தையில் 749 புள்ளிகள் வீழ்ச்சி கண்டன.

“செபி’ அதிர்ச்சி: ராமலிங்க ராஜூவின் ஒப்புதல் கடிதம் குறித்து பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத் தலைவர் பாவே கண்டு அதிர்ச்சி தெரிவித்தார். எப்படி ஆண்டுக்கணக்கில் அதிக ஆதாயம் இருப்பதாக வரவு, செலவுக் கணக்கில் காட்டி அதற்கு உரிய அங்கீகாரமும் பெற முடிந்தது என்ற கேள்வியை எழுப்பினார். கம்பெனிகள் விவகார அமைச்சகத்துடன் நடத்தப்படும் ஆலோசனைக்குப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஏற்கனவே சத்யம் கம்பெனி நியூயார்க் பங்குச் சந்தையிலும் பதிவாகியிருப்பதால், அமெரிக்க நடவடிக்கையும் இருக்கும் என்றார். மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை இச்செயலை “பெரிய மோசடியாக கருதுகிறது. இந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள விசேஷ அமைப்பு இந்த மோசடியை விசாரிக்கும் என்று கூறப்பட்டது. கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் குப்தா, “கணக்குகளைச் சரிபார்த்த ஆடிட்டர்கள், அதற்குத் துணையாக இருந்தவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை வரும்’ என்றார். நாடு முழுவதும் கம்பெனிகள் என்றால் தனி கவுரவம், நம்பிக்கை என்ற நிலையை சத்யம் தகர்த்து விட்டதுடன், மிகவும் நாசூக்காக நடந்த “மெகா மோசடி’ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏழு ஆண்டு சிறை நிச்சயம்: மெகா மோசடியில் ஈடுபட்டு ஒப்புதல் தகவல் தந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிர்வாகி ராமலிங்க ராஜூ செய்த குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை நிச்சயம் என்று கம்பெனித் துறை வக்கீல்கள் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட் சீனீயர் வக்கீல் சி.ஏ.சுந்தரம் கூறுகையில், “ராஜூ அளித்த ஒப்புதல் கடிதம் அப்படியே உண்மை என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில் அது மிகவும் சீரியசான விஷயம். “செபி’ நடைமுறைகளை மீறிய விஷயம், கம்பெனிச் சட்டங்களை மீறிய செயல், இந்திய குற்றவியல் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்’ என்றார். மற்றொரு வக்கீல் சவுத்ரி, “கம்பெனிகள் சட்டப்படி அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை தரலாம்’ என்றார். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி காரணமாக ஏற்பட்ட பிரச்னைக்குத் தீர்வாக இந்த நிர்வாகத்தை அரசு எடுத்துக் கொள்ளுமா என்ற கேள்விக்கு மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத், “இது முற்றிலும் கம்பெனிகள் சம்பந்தப்பட்ட விவகாரம்’ என்றார்.

ராமலிங்க ராஜூ கைது ஆவாரா?: ஐதராபாத்:சமுதாயத்தில் பெரிய அந்தஸ்துடன் செயல் பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிர்வாகி ராமலிங்க ராஜூ தற்போது முறைகேடு செய்திருப்பதால், அவரை ஆந்திர அரசு கைது செய்யும் என்று தெரிகிறது. ராமலிங்க ராஜூ ஆந்திராவைச் சேர்ந்தவர். ஐதராபாத்தில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைமையகம் இருக்கிறது. ராமலிங்க ராஜூ மகன் மாயடாஸ். இக்கம்பெனிக்கு ஐதராபாத் மெட்ரோ திட்டம் தரப்பட்டிருக்கிறது. அதேபோல, மச்சிலிப்பட்டனம் துறைமுகத் திட்டமும் தரப்பட்டிருக்கிறது. சத்யம் மெகா மோசடி பற்றி ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி கேட்டதும், “தலையைச் சுற்றும் அளவுக்கு பெரிய பண மோசடி நடந்திருக்கிறது. சி.பி.சி.ஐ.டி., விசாரித்து, தேவைப்பட்டால், கைது நடவடிக்கையையும் எடுக்கும்’ என்றார்.

அதேசமயம், டில்லியில் “பிக்கி’ மற்றும் “சி.ஐ.ஐ.,’ ஆகிய தொழில் அமைப்புகள் சத்யம் மோசடி குறித்து பெரும் அதிர்ச்சி தெரிவித்திருக்கின்றன. சி.ஐ.ஐ., தலைவர் காமத் கூறுகையில், “கம்பெனிகள் நிர்வாகம் தரமாக இருக்க வேண்டும், கம்பெனியில் பங்குகள் வாங்கியவர்கள் நம்பிக்கையைப் பெற வேண்டும். இந்தச் சம்பவம் இனி நடக்கக் கூடாது’ என்றார். மும்பையில் உள்ள முன்னாள் எம்.பி., கீர்த்தி சவ்லா, பங்குகள் விவகாரத்தில் நிபுணர். அவர் கூறுகையில், “சத்யம் கம்பெனி புரோமோட்டர்கள் மற்றும் கம்பெனி ஆடிட்டர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.