பெட்ரோல், டீசல், காஸ் விலை குறைப்பு எப்போது? : மத்திய அமைச்சர் முரளி தியோரா அறிவிப்பு (08.01.2009) செய்திகள்.

புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் குறைக்கப்படலாம். காஸ் சிலிண்டர் விலையும் 25 முதல் 30 ரூபாய் வரை குறைக்கப்படலாம் என, மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த போது, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்த்தப்பட்டது. அதன்பின், கச்சா எண்ணெய் விலை குறைய ஆரம்பித்த போது, கடந்த டிசம்பரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாயும் குறைக்கப் பட்டது.

தற்போது, கச்சா எண்ணெய் விலை மேலும் சரிந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலும் எழுந்துள்ளது. இது குறித்து பார்லிமென்டிலும் சமீபத்தில் பிரச்னை எழுப்பப்பட்டது. அப்போது, அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என, அறிவிக்கப்பட்டது. இருந்தாலும், எந்த தேதியில் அறிவிக்கப்படும் என்பது உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று நிருபர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முயற்சித்து வருகிறோம். அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் விலை குறைக்கப்படலாம். எவ்வளவு குறைக்கப்படும் என்பதை தெரிவிக்க இயலாது. சமையல் காஸ் விற்பனையில் அரசுக்கு இழப்பு தான் ஏற்பட்டு வருகிறது. இருந்தாலும், 25 முதல் 30 ரூபாய் வரை விலை குறைக்கப்படும். லாரி உரிமையாளர்களை சிலர் தவறாக வழிநடத்திச் செல்கின்றனர். இதுவே அவர்களின் போராட்டத்திற்கு காரணம். இவ்வாறு அமைச்சர் தியோரா கூறினார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.