மும்பைத் தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை பாகிஸ்தானிடம் கையளித்தது அமெரிக்கா

மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அமெரிக்கா கையளித்துள்ளதாக லண்டன் சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மும்பைத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர்கள் பாகிஸ்தானில் இருந்தவாறே தாக்குதலுக்கு வழிகாட்டினர்.

அத்துடன், அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ஸாரர் ஷா பயங்கரவாதிகளுக்கு நிமிடத்துக்கு நிமிடம் தொலைபேசி மூலம் வழிகாட்டிக் கொண்டிருந்ததுடன் தாக்குதலையும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதும் இந்திய கொமாண்டோ வீரர்கள் விரைந்து வந்து அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதைத் தொலைக்காட்சியில் பார்த்த ஸாரர் ஷா பயங்கரவாதிகளுக்கு தகவல் அளித்து உஷார்ப்படுத்தினார்.

அதேபோல , நட்சத்திர ஹோட்டல்களில் முஸ்லிம்கள் யாரேனும் இருந்தால் அவர்களை விட்டுவிட்டு யூதர்கள் அனைவரையும் கொன்றுவிடுமாறு அவர் கட்டளை பிறப்பித்ததற்கான ஆதாரத்தையும் பாகிஸ்தான் அரசிடம் அமெரிக்க புலனாய்வுக் குழு அளித்துள்ளதாகவும் அந்தப் பத்திரிகை கூறியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்தபடியே தாஜ், ஒபராய் மற்றும் நரிமன் ஹவுஸ் ஆகிய இடங்களில் இருந்த தீவிரவாதிகளிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். இணையத்தளத்தில் ?ஸ்கைப் அழைப்புகள்? மூலமாக எப்.பி.ஐ. அதிகாரிகள் இதைக் கண்டு பிடித்தனர். மேலும், விசாரணையின் போதும் இந்த தகவலை ஸரார் ஷா ஒப்புக்கொண்டார்.

ஸரார் ஷாவுக்கு துணையாக அபு ஹம்ஸா, அபு காபா ஆகிய தீவிரவாதிகளும் செயற்கை கோள் செல்போன் மூலமாக கட்டளைகளை பிறப்பித்தனர். மும்பையில் இருந்த தீவிரவாதிகளுக்கும் ஸரார் ஷா கூட்டாளிகளுக்கும் இடையே பஞ்சாபி மொழியில் உரையாடல் நடந்துள்ளது. ?ஆக் லகோ (சுடுங்கள்)? என்ற வார்த்தைதான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும், அந்த உரையாடலின் போது நரிமன் ஹவுஸில் உள்ள அனைத்து இஸ்ரேலியர்களையும் கொன்றுவிடுங்கள் என்றும் முஸ்லிம்களை கூடுமானவரை தப்பிச் செல்லவிடுங்கள் என்றும் தீவிரவாதிகளுக்கு ஸரார் ஷா உத்தரவிட்டுள்ளார். மும்பைக்கு வந்த 10 பேருமே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயிற்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆதாரங்களை பாகிஸ்தான் அரசிடம் எ.பி.ஐ. அதிகாரிகள் அளித்து இருப்பதாக அந்தப் பத்திரிகை தகவல் வெளியிட்டு இருக்கிறது. ஆனால், அந்த ஆதாரங்களை பாகிஸ்தான் நிராகரித்து விட்டாக கூறப்படுகிறது. அதேபோல பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் லஷ்கர் இ தொய்பா இடையிலான நெருங்கிய நட்பையும் பாகிஸ்தான் மறுத்துள்ளது.

Ssource  &  Thanks  :  yarl.com

Leave a Reply

Your email address will not be published.