சத்யம் அதிபர் ராமலிங்க ராஜு ராஜினாமா-முறைகேடுகளை ஒப்புக் கொண்டார்

ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனரும் அதன் தலைவருமான ராமலிங்க ராஜு இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சத்யம் நி்ர்வாகப் பதவியிலிருந்து விலகுவதாக அதன் இயக்குனர் குழுவுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து ராம் மைனாம்பதி சத்யம் நிறுவனத்தின் இடைக்கால செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இயக்குனர் குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்துடன் நிறுவனத்தின் இஇருப்பு நிலைக் குறிப்பையும் ராஜூ சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி இதுவரை சத்யம் நிறுவனத்திடம் கையிருப்பாக இருப்பதாகக் கூறப்பட்ட ரூ. 5,361 கோடி உண்மையில் கையிருப்பில் இல்லை. ரூ. 5,040 கோடி தான் உள்ளது. மேலும் ரூ. 376 கோடி ரூபாய் வட்டித் தொகையும் இருப்பதாகக் காட்டப்பட்டது. உண்மையில் அந்தப் பணம் இல்லை. நிறுவனத்தின் கணக்கில் இவை திரித்துக் காட்டப்பட்டன என்று ராமலிங்க ராஜு ஒப்புக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சத்யம் நிறுவனம் ரூ. 2,700 கோடியை வருவாயிலும் ரூ. 649 கோடியை லாபத்திலும் காட்டினோம். ஆனால், உண்மையில் வருவாய் ரூ. 2,112 கோடி தான் லாபம் ரூ. 61 கோடிதான் என்றும் கூறியுள்ளார் ராஜு.

இதன் மூலம் ரூ. 588 கோடியை உயர்த்திக் காட்டியுள்ளார் ராஜு. பல ஆண்டுகளாக இவ்வாறு லாபத்தை உயர்த்திக் காட்டி வந்ததாகவும் ஒரு கட்டத்தில் உண்மையான லாபத்துக்கும் கணக்கில் காட்டப்பட்ட லாபத்துக்கும் இடையிலான வித்தியாசம் மிக மிக அதிகரித்துவிட்டதால் அதைச் சரி செய்யும் முயற்சியாகத்தான் தான் மேடாஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடுகளைச் செய்து கணக்குகளை நேர் செய்ய திட்டமிட்டோம். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது.

இதுவரை இந்த உண்மைகளை நான மறைத்தது தவறுதான். ஆனால் சத்யம் நிறுவனத்தின் ஒரு பைசாவைக்கூட நானோ என் உறவினர்களோ கையாடவில்லை. சொல்லப் போனால், நிறுவனத்தை நடத்த ரூ. 1230 கோடியை நான் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளேன் (ஆனால் இது நிறுவனக் கணக்கில் காட்டப்படவில்லை!). உண்மைகளைச் சொல்லிவிட்டேன், இனி நிர்வாகக் குழுவும், செபியும் முடிவு செய்யட்டும்.

சட்ட நடவடிக்கைகளை சந்திக்க தயார்:

இந்த விவகாரம் எதுவுமே எனக்கு கீழ் பணியாற்றிய இயக்குநர்கள், தலைமை அதிகாரிகள், நிர்வாக மேலாளர்கள், விற்பனை மேலாளர்கள் யாருக்குமே தெரியாது என ராஜூ அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதையே இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளும் கூறியுள்ளனர்.

ராஜூவின் விலகல் மற்றும் சத்யம் நிறுவனத்தில் நிஜமான நிலவரம் தெரிந்த பிறகு இன்று பங்குச் சந்தையில் சத்யம் நிறுவன பங்குகள் கிடுகிடுவென வீழந்தன.

Source &thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.