பள்ளியைத் தாக்கி தகர்த்த இஸ்ரேல் – 42 பேர் பரிதாப சாவு

ஜெருசலேம்: ஐ.நா. கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளியை இஸ்ரேலியப் படைகள் தாக்கித் தகர்த்தன. இதில் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த அப்பாவி பொதுமக்கள் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

இஸ்ரேலின் கடும் தாக்குதலிலிருந்து தப்பிக்க பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவற்றில் பாலஸ்தீனியர்கள் புகலிடமடைந்துள்ளனர்.

காஸா முனைப் பகுதியில் உள்ள ஐ.நா. கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு பள்ளியிலும் இதுபோல நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைக்கலம் புகுந்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்தப் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேலியப் படைகள் கடும் தாக்குதலைத் தொடுத்தன.

இந்தத் தாக்குதலில் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த 42 அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமான பேர் காயமடைந்தனர்.

இந்த அராஜக தாக்குதலில் பல குழந்தைகளும் கூட பலியாகியுள்ளன. சிதறிப் போன அந்த பிஞ்சுக் குழந்தைகளின் உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடந்ததைப் பார்க்கவே மிகப் பரிதாபமாக இருந்தது.

இந்த கொடூரக் கொலை மூலம் காஸாவில் பலியானோரின் எண்ணிக்கை 620ஐ எட்டியுள்ளது.

டிசம்பர் 27ம் தேதி முதல் வெறித்தனமாக தாக்கி காஸாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய சம்பவம் நடந்த இடம் ஜபாலியா என்ற இடமாகும். அங்கு இஸ்ரேல் ராணுவத்தின் டாங்குப் படை சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியதில் இந்தக் கொடூரம் நடந்தது.

ஆனால் அந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து தங்களது படைகள் மீது மார்ட்டர் தாக்குதல் நடைபெற்றதால்தான் பள்ளி மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

பள்ளிகளை கவசமாக பயன்படுத்திக் கொண்டு ஹமாஸ் தங்கள் மீது மார்ட்டர் தாக்குதலை நடத்துவதாகவும் அது கூறுகிறது.

முன்னதாக காஸா நகரில் உள்ள மூன்று ஐ.நா. பள்ளிகள் மீதும் இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசித் தாக்கியது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

ஐ.நா. முதல் உலக நாடுகள் பலவும் போரை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தும், அத்தனையையும் நிராகரித்து விட்டது இஸ்ரேல். தனக்கு தோன்றியதை மட்டுமே அது செய்து வருகிறது. கடைசி ஹமாஸ் போராளி கொல்லப்படும் வரை தாக்குவோம் எனவும் பிடிவாதமாக கூறிக் கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

இந்த நிலையில், தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் என்ற நகருக்குள் தற்போது இஸ்ரேலிய டாங்குகள் நுழைந்து கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Source   &  Thanks : aol.in/tamil/

Leave a Reply

Your email address will not be published.