இன்று முதல் சென்னை வெளிநாட்டு இந்தியர் மாநாடு-வரலாறு காணாத பாதுகாப்பு

சென்னை: வெளிநாட்டு இந்தியர்கள் மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டுக்கு டெக்கன் முஜாகிதீன் அமைப்பிடமிருந்து மிரட்டல் இ-மெயிலும், இன்னொரு மிரட்டல் கடிதமும் வந்துள்ளதையடுத்து வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டை இன்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைக்கிறார். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் நாளை பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கிறார். இதற்காக இன்றிரவு அவர் சென்னை வருகிறார்.

9ம் தேதி ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மாநாட்டில் பங்கேற்று நிறைவுரை ஆற்றுகிறார். இதில் மொரீஷியஸ் நாட்டு துணை அதிபர் அங்கிடி ஹெட்டியார், மொரீஷியஸ், இலங்கை, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா நாடுகளின் அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டுக்கு `டெக்கன் முஜாகிதீன்’ என்ற அமைப்பின் பெயரில் இ-மெயில் மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வார காலமாகவே மாநாடு நடக்கும் பகுதி, போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுவிட்டது.

இந் நிலையில் எழும்பூரில் உள்ள ஏர்-இந்தியா விமான நிறுவனத்துக்கு நேற்று வந்த ஒரு கடிதத்தில் `மாநாடு நடைபெறும் வர்த்தக மையம், சென்னை விமான நிலையம் ஆகியவற்றை குண்டு வைத்து தகர்ப்போம்’ என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தையடுத்து சென்னையில் உச்சபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாநில போலீசார், உளவுப் பிரிவினருடன் ஐபி, ரா அதிகாரிகளும், தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் என்எஸ்ஜி பிரிவின் அதிகாரிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரில் கண்காணித்து வருகின்றனர்.

வர்த்தக மைய பகுதியில் மட்டும் சுமார் 3,000 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணிக்காக காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தேனி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மோப்ப நாய்கள், வெடி குண்டு நிபுணர்கள், ஆம்புலன்ஸ்கள், ஜாமர்கள் என வர்த்தக மையமே பாதுகாப்பு கோட்டையாக மாறியுள்ளது.

2 போலீஸ் டி.ஐ.ஜிக்கள், 7 எஸ்.பிக்கள் தலைமையில் போலீசார் இந்த பாதுகாப்புப் பணிகளை செய்துள்ளனர். சென்னை நகர், விமான நிலையம், முக்கிய ஹோட்டல்கள், விருந்தினர்கள் தங்கும் இடங்கள், ராஜ்பவன், தூதரகங்கள், பாலங்கள், வர்த்தக மையத்துக்குச் செல்லும் பாதைகள் என அனைத்து இடங்களிலும் 10,000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

அதிவிரைவுப் படை, அதிரடிப்படை போலீசாரும் இந்த பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அடையாள அட்டை இல்லாத யாரும் மாநாட்டுப் பகுதியை நெருங்கவே முடியாத அளவுக்கு தீவிர சோதனைகளும் கண்காணிப்பும் நடக்கிறது.

Source  &thanks : aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.