“கிளிநொச்சியில் புலிகளின் தலைமையகத்தில் ஒரு சிறுதுண்டு கடதாசியைக் கூட காணவில்லை’

கிளிநொச்சியைக் கைப்பற்றிய இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் நுழைந்த போது அங்கு சிறு காகிதத் துண்டைக் கூட விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றிருக்கவில்லையென இந்துஸ்தான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
இத் தகவலை விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் முதலாவதாக நுழைந்தவர்களில் ஒருவரான இராணுவ அதிகாரி மேஜர் அமுனுபுர தெரிவித்ததாக இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியை பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்களில் இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தியாளரும் ஒருவராவார்.

நான்கு தளங்களைக் கொண்ட இக் கட்டிடத்திற்குள் நாம் நுழைந்தபோது சிறு காகிதத் துண்டைக் கூட விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றிருக்கவில்லை.

இலேசாக மூடியிருந்த பிரதான கதவில் திறப்பு தொங்கவிடப்பட்டிருந்தது. கணினிகள், தொடர்பாடல் உபகரணங்கள், காகிதங்கள் என அங்கிருந்த ஒவ்வொன்றையும் அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனரென அமுனுபுர கூறியதாக இச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்துஸ்தான் செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

விடுதலைப் புலிகளின் சமாதான செயலகமாகவும் போர் நிறுத்தகாலத்தில் பல முக்கிய சந்திப்புகள் நடைபெற்ற இடமாகவும் விளங்கிய இவ் தலைமையகம் புதிதாக குடியேறப் போகிறவர்கள் வசிக்கப் போகும் ஒரு வெறுமையான கட்டிடமாக காட்சியளித்தது.

தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் அலுவலகமும் இதேபோன்று காணப்படும் அதேவேளை, ஏறத்தாழ கிளிநொச்சி நகரம் முழுவதிலும் இவ்வாறானதொரு வெறுமையே பரவியுள்ளது.

இங்கு ஒரு பொதுமகனைக் கூட காண முடியவில்லை. குண்டுகளால் துளையிடப்பட்ட வீடுகள், கூரைகள், கதவுகள், யன்னல்களின்றி காணப்படுகின்றன. பெரிய நீர்த்தாங்கியொன்று சின்னாபின்னமாகியுள்ளது. விடுதலைப் புலிகளின் படையணிகள் இங்கிருந்து நகர்வதற்கு முன்னர் பொதுமக்களின் உதவியுடன் இங்கிருந்த ஒவ்வொன்றையும் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர்.

மின் குமிழ்கள், வீதி விளக்குகள், மின் இணைப்பிற்கான வயர்கள், விளம்பரப் பலகைகள், கூரைத் தகடுகள், ஜெனரேட்டர்கள், உடைகள், புத்தகங்கள், தளபாடம் மற்றும் வாகனங்களென ஒவ்வொன்றும் இங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. தேவாலயங்கள், கோயில்கள் என்பன பக்தர்களின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. கொண்டு செல்ல முடியாத கூரைகள் மட்டுமே இங்குள்ள கட்டிடங்களில் எஞ்சியுள்ளது.

கிளிநொச்சி தேசிய மருத்துவமனையில் காயங்களுக்குப் பயன்படுத்தப்படும் சிறு பண்டேச் துணி கூட காணப்படவில்லை. அனைத்துவகை உபகரணங்களும் மருந்துப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இங்குள்ள சில அரசாங்க கட்டிடங்களும் இதேபோன்று வெறுமையாகவே காணப்படுகின்றது.

கடும் போர் நடந்தமைக்கான அறிகுறிகள் நகரெங்கிலும் தென்படுகின்றன. வெடிக்காத கிரைனேட்டுகள், வெடி பொருட்களின் வெற்றுப் பெட்டிகள், குண்டு துளைத்த வீடுகள் என்பன நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நகரம் யுத்தத்தால் எவ்வாறு அழிவடைந்துள்ளதென்பதை ஒவ்வொருவருக்கும் நினைவு படுத்துவதாக உள்ளது. படையினர் கண்ணிவெடி எதிர்ப்புச் சப்பாத்துகளை அணிந்துள்ளதுடன், ஒவ்வொரு அடியையும் மிகவும் ஜாக்கிரதையாக எடுத்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆட்லெறி ஷெல்களின் சத்தங்களும் ஹெலிகொப்டர்களிலிருந்து மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கிழக்குப் பகுதியிலிருந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இங்குள்ள இராணுவத்தினரைப் பார்க்கும் போது தற்போது அவர்கள் சற்று ஆறுதவடைந்திருப்பதைப் போல் தோன்றுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : yarl.com

Leave a Reply

Your email address will not be published.