மீனவர்களுக்கு மொபைல்!மாநில அரசுகள் வழங்க வேண்டும் *முதல்வர்கள் மாநாட்டில் யோசனை

“கடல்வழி தாக்குதல் சம்பவங்கள் குறித்த உளவுத் தகவல்களை பெறுவதற்கு மீனவர்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். இதற்காக, மீனவர்களுக்கு அதிக அளவில் நவீன மொபைல் போன்களை மாநில அரசுகள் அளிக்க முன்வர வேண்டும். அதன் மூலம் கடல் மார்க்கமாக பயங்கரவாதிகள் மேற்கொள்ள நினைக்கும் தாக்குதல்களை முறியடிக்க ஏதுவாக இருக்கும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்ற தேசிய மாநாடு டில்லியில் நேற்று நடைபெற்றது.


விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:கடந்த நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பே காரணம் என்று தெரியவந்துள்ளது. மும்பை சம்பவம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து பார்த்தபோது பல்வேறு ஆதாரங்களும் முக்கிய தடயங்களும் கிடைத்தள்ளன. அந்த அடிப்படையில் மும்பை சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அதிகாரப்பூர்வ அமைப்புகள் சில சம்பந்தப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் மும்பை சம்பவத்துக்கு ஆதரவாக இருந்துள்ளதாக தெரிகிறது.

பாகிஸ்தான் தொடர்ச்சியாக பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தபடியே உள்ளது. அந்நாட்டிலிருந்து பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க இரு நாடுகளின் எல்லையோரமாக வேலி அமைக்கப் பட்டது. வங்கதேசத்திலிருந்தும் பயங்கரவாதிகள் ஊடுருவுகின்றனர். இவற்றை தடுக்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகின்றன.தரை மார்க்கமாக ஊடுருவுவதை விட்டுவிட்டு தற்போது கடல் மார்க்கமாக ஊடுருவ பயங்கரவாதிகள் புது யுக்தியை மேற்கொள்கின்றனர். இது குறித்து தகவல் தெரிந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும், அதையும் மீறி மும்பை சம்பவம் நடந்து விட்டது.உளவுப் பிரிவின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அளிக்கப்படும் உளவுத் தகவல்கள் பெரும்பாலானவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத தகவல்களாக உள்ளதாக கூறுவது தவறு.

எந்தஒரு தகவலின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; எடுக்க முடியும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டு பின்னர் குறை கூறுவது கூடாது.கடல்வழி தாக்குதல் சம்பவங்கள் குறித்த உளவுத் தகவல்களை பெறுவதற்கு மீனவர்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். கடற்பரப்பில் என்ன சம்பவங்கள் நடைபெறுகின்றன என்ற விவரங்கள் எல்லாம் மற்ற எல்லாரையும் விட மீனவர்களுக்கே அதிகமாக தெரியும். எனவே, அவர்கள் மூலமாக பல தகவல்களை பெற முடியும்.

இதற்காக மீனவர்களுக்கு அதிக அளவில் நவீன மொபைல் போன்களை மாநில அரசுகள் அளிக்க முன்வர வேண்டும். அதன் மூலம் கடல் மார்க்கமாக பயங்கரவாதிகள் மேற்கொள்ள நினைக்கும் தாக்குதல்களை முறியடிக்க ஏதுவாக இருக்கும்.நெருக்கடி கால சூழ்நிலையை கையாளும் குழு ஒன்று ஏற்படுத்தப்படும் என்று பார்லிமென்டில் உறுதியளித்து இருந் தேன். அந்த குழு இப்போது தயாராகிவிட்டது; செயல்படவும் ஆரம்பித்துவிட்டது.

கடல் மார்க்கம் மட்டுமல்லாது வான் வழியாகவும் அசம் பாவிதங்கள் ஏற்பட்டு விடாதபடிக்கு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. தவிர அணு நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களுக்கு மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள் ளது.குண்டுவெடிப்பு மற்றும் பயங்கரவாத சம்பவங்களால் டில்லி, ஐதராபாத், பெங்களூரு, ஜெய்ப்பூர், ஆமதாபாத், சூரத் மற்றும் அசாம் ஆகிய நகரங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார், மத்திய, மாநில அரசுகள் ஆகியவற்றின் நடவடிக்கைகள் மட்டுமே போதாது. பொதுமக்களிடமிருந்தும் பெரிய அளவில் ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

தயார் நிலையில் இருப்பதே மேல்… : பிரதமர் தன் உரையில், “இனி மும்பை சம்பவத்தை போல எந்தவொரு பயங்ரவாத சம்பவமும் இந்தியாவில் நடக்க முடியாதபடி தடுத்து நிறுத்த வேண்டும்’ என்றார். பயங்கரவாதத்தை சிறிதும் சகித்துக் கொள்ளாத கொள்கை நிலையை நாம் எடுக்க வேண்டும். அதை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.அதிநவீன தொழில்நுட்பங்களானாலும், வழிமுறைகளானாலும், பயங்கரவாதிகள் செயல்பாடுகள் வேகத்திற்கு மாறி, அவர்களை முறியடிக்க வேண்டும் என்பதே நமக்கு எதிரே உள்ள சவால். சம்பவங்கள் நடக்கும் போது மட்டும் நாம் அதற்கு பதிலடி கொடுப்பதாக இருந்துவிடக் கூடாது. முன்கூட்டியே தயார் நிலையில் இருந்து தாக்குதல்கள் நடக்காத வகையில் தடுக்கும் வகையில் நாம் தயாராக வேண்டும். பயங்கரவாத சக்திகளை தடுக்கும் வகையில், புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்புகளை நாம் வலுப்படுத்த வேண்டும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.