இந்தியாவின் ஆதாரம் போதுமானதாக இல்லை : பயங்கரவாதிகளை ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு

இஸ்லாமாபாத் : மும்பை தாக்குதல் தொடர்பாக திரட்டப்பட்ட ஆதாரங்களை இந்தியா நேற்று பாகிஸ்தானுக்கு ஒப்படைத்தது. இது குறித்த கருத்து பாகிஸ்தான் பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது. இந்தியா கொடுத்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை இதை வைத்துக் கொண்டு யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. இஸ்லாமாபாத்தில் இருந்து வெளியாகும் தி நேஷன் எனும் பத்திரிகையில், இந்தியாவின் ஆதாரங்கள் போதுமான அளவுக்கு இல்லை என்பதற்கு 3 காரணங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள்

கூறியிருப்பதாவது :- உயிருடன் பிடிபட்டுள்ள தீவிரவாதி அஜ்மல் வாக்குமூலத்தை எந்த காரணத்தை கொண்டும் ஒரு ஆதாரமாக ஏற்க இயலாது. அந்த ஆதாரங்கள் சித்தரிக்கப்பட்டவை. அவற்றின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்குரியது. தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டது என்பதற்கான முத்திரை இருப்பதாக இந்தியா சொல்கிறது. இதற்கான உண்மையான ஆதாரம் எதையும் இந்தியா தரவில்லை. இந்தியா கொடுத்துள்ள ஆதாரங்களில் புதிதாக எந்த தகவலும் இல்லை. இந்திய அரசு பாகிஸ்தான் மீது இதுவரை வெளியிட்ட, இந்திய ஊடகங்களில் வெளிவந்த குற்றச்சாட்டு தகவல்களை தொகுத்துதான் தந்துள்ளது. இந்த ஆதாரங்கள் நடவடிக்கை எடுக்க போதுமானது அல்ல. இவ்வாறு அதிகாரிகள் கூறி இருப்பதாக பாக்., பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தியா கொடுத்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்ற தகவலை அமெரிக்காவிடம் இன்று பாகிஸ்தான் தெரிவித்தது. இந்நிலையில் இந்தியாவுக்கு இது தொடர்பாக ஓரிரு நாளில் பாகிஸ்தான் அதிகாரப் பூர்வமாக பதில் சொல்லும் என்று தெரிகிறது.

Source  & Thanks :  dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.