லாரி ஸ்டிரைக்: பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு, காய்கறி விலை ‘ஜிவ்’

சென்னை: லாரிகள் ஸ்டிரைக் எதிரொலியாக சென்னைக்கும் தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும் வெளியூர்களிலிருந்து வரும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் வரத்து அடியோடு குறைந்து விட்டது. இதனால் காய்கறிகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரத் தொடங்கியுள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், டீசல் உள் ளிட்ட எரிபொருட்களின் விலையை குறைக்காத மத் திய அரசைக் கண்டித்தும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தியும் நாடு முழுவதும் லட்சக்கணக்கான லாரிகளின் வேலை நிறுத்தம் ஞாயிறன்று நள்ளிரவு முதல் துவங்கியது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசில் இணைந்துள்ள 4 ஆயிரத்திற்கும் அதிகமான சங்கங்கள் பங்கேற்றுள்ளன.

வேலைநிறுத்தம் காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சரக்குப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.

கிட்டத்தட்ட 48 லட்சம் சரக்கு வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், இவற்றில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றும் சுமார் 10 கோடி பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சரக்குப் போக்குவரத்து ஸ்தம்பித்ததன் விளைவாக ஒட்டு மொத்தத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ..

தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள், வேன்கள், டேங்கர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக பல கோடி ரூபாய் பெறுமான சரக்குகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சந்தைகளுக்கு காய்கறி கொண்டு வரப்படாததால் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயரத் துவங்கியுள்ளது.

தக்காளி – வெங்காயம் விலை கடும் உயர்வு

தக்காளி, வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்தது. பிற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 500 லாரிகளில் காய்கறிகள் வருவதுண்டு. ஆனால் லாரி ஸ்டிரைக் காரணமாக 300 லாரிகள்தான் மட்டுமே கோயம்பேடுக்கு வந்தன. மற்ற லாரிகள் ஸ்ரீபெரும்புதூர், கும்மிடிபூண்டி பகு தியில் நிறுத்தப்பட்டு விட்டன.

இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

வெங்காயம், தக்காளி, உருளைக் கிழங்கு விலை கிடுகிடு என உயர்ந்து விட்டது.

ஞாயிற்றுக் கிழமை ரூ.22-க்கு விற்ற ஒரு கிலோ வெங்காயம் திங்கட்கிழமை 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதே போல் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

உருளைக் கிழங்கு 10 ரூபாயில் இருந்து 12 ரூபாயாகி விட்டது. முட்டை கோஸ், கேரட், பீன்ஸ் கிலோ ரூ.15-க்கும் செளவ் செளவ் ரூ. 12-க்கும், வெண்டைக்காய் ரூ.20-கும் விற்பனையானது.

கோயம்பேடு மார்க் கெட்டில் இருந்துதான் எல் லா பகுதிகளுக்கும் காய்கறிகள் அனுப்பப்படுகிறது. ஆனால் லாரி ஸ்டிரைக் காரணமாக லாரிகள் பாதிக்கு மேல் வராமல் நின்று விட்டன. இதனால் டிமாண்ட் அதிகமாகி விட்டது.

வெங்காயம், தக்காளி, உருளைகிழங்கு விலை அதிகமாகி விட்டது. வரும் நாட்களில் காய்கறி தட்டுப்பாடு உருவாகி விடும். பஸ் அல்லது ரயில் மூலம்தான் காய்கறிகளை கொண்டு வர முடியும். இதனால் விலை உயர்வு ஏற்படும்.

பெட்ரோல்-டீசலுக்கும் தட்டுப்பாடு

பெட்ரோல், சமையல் எரிவாயு தட்டுப்பாடும் உருவாகியுள்ளது. கடந்த 5 நாட்களாக டேங்கர் லாரிகளும் ஓடாததால் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உட னே கிடைக்காது என்கிறார்கள்.

இது பற்றி தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம் கூறுகையில் லாரி ஸ்டிரைக் ஆரம்பமாவதற்கு முன்பே சிலிண்டர் லாரிகள் ஸ்டிரைக்கில் உள்ளன. இதனால் எரிவாயு ஏற்றி செல்வது முற்றிலும் நின்று விட்டது என்றார்.

இப்போதே பல ஊர்களில் பெட்ரோல், டீசல் ஸ்டாக் இல்லை என்று பெட்ரோல் பங்குகளில் எழுதி வைத்துள்ளனர்.

மொத்தத்தில் இந்த ஸ்டிரைக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

பாலு எச்சரிக்கை:

இந் நிலையில் சென்னையில் நிருபர்களிடம் பேசிய மத்திய தரைவழிப் போக்குவரத்து, மற்றும் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு,

லாரி உரிமையாளர்கள் தாங்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஏற்கனவே பல சலுகைகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

டீசல் விலை குறைப்பு குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 150 ரூபாய்க்கு மேல் விற்றதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டியுள்ளது.

இருந்தாலும், டீசல் விலையை குறைக்க வேண்டுமென்று திமுக சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளோம். எனவே இதை கருத்தில் கொண்டு லாரிகளை திரும்ப இயக்க வேண்டும். லாரி உரிமங்களை ரத்து செய்யும் நிலைக்கு அரசை தள்ளக்கூடாது.

இலங்கைத் தமிழர் பிரச்சனையை பொறுத்தவரையில் மத்திய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. திருமங்கலம் தொகுதியில் திமுக வேட்பாளர் லதா அதியமான் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.

Source & Thanks :thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.