கஸாப்புக்கு 19ம் தேதி வரை போலீஸ் காவல்

மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சிக்கி கைதான தீவிரவாதி அஜ்மல் கஸாப்புக்கு ஜனவரி 19ம் தேதி வரை போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

காமா மருத்துவமனையில் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கில் கஸாப்பிடம் விசாரணை நடத்த ஆசாத் மைதான் காவல் நிலைய போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இதுதொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி ஜனவரி 19ம் தேதி வரை கஸாப்பை காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி வழங்கினார்.

தற்போது கஸாப் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரை தங்களது பொறுப்பில் எடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தவுள்ளனர்.

பாதுகாப்பு காரணம் கருதி நீதிமன்றத்திற்கு கஸாப் அழைத்து வரப்படவில்லை.

நவம்பர் 26ம் தேதி காமா மருத்துவமனையில் கஸாப்பும், அவனது கூட்டாளியான இஸ்மாயில் கானும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீஸார் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks :aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.