காஸாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் புகுந்தது-இதுவரை 490 பேர் பலி

காஸா: இதுவரை காஸா நகரை வான் வழித் தாக்குதல் மூலம் சின்னாபின்னப்படுத்திய இஸ்ரேல், தற்போது ராணுவத்தை தரை மார்க்கமாக காஸா நகருக்குள் கொண்டு சென்றுள்ளது. இதனால் காஸா நகரில் நிலைமை மேலும் மோசமடையும் அபாயம் எழுந்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினரின் தொடர் ராக்கெட் வீச்சால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படை, காஸா நகரை சல்லடையாக துளைத்தெடுத்துக் கொண்டுள்ளது.

தொடர் விமானத் தாக்குதலால் இதுவரை 490 பாலஸ்தீனியர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு அமெரி்க்காவின் முழு ஆதரவு இருப்பதால் யார் சொல்லியும் அது கேட்பதாக இல்லை.

செவிகளையும், கண்களையும் மூடிக் கொண்டு பாலஸ்தீனப் பகுதியில் கண்மூடித்தனமான தாக்குதலை அது நடத்தி வருகிறது.

இந்த கொடூரத் தாக்குதலால் காஸா நகரமே சுடுகாடு போலாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது ராணுவத்தையும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை காஸாவுக்குள் அனுப்பியுள்ளது. ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் காஸா நகருக்குள் புகுந்துள்ளனர்.

டேங்குகள் சகிதம் அவர்கள் புகுந்து நகரை சுற்றி வளைத்துள்ளனர். காஸா நகரின் சாலைகள் மற்றும் வயல் வெளிகள் முழுவதும் இஸ்ரேல் படையினரின் டேங்குகள் நிறைந்துள்ளன.

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இறுதித் தாக்குதலை நடத்தவே ராணுவத்தை உள்ளே அனுப்பியுள்ளது இஸ்ரேல். இதனால் உயிரிழப்பு மேலும் பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

காஸா நகரின் முக்கியச் சாலைகளை இஸ்ரேல் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. காஸா நகரின் நுழைவாயில்கள் அனைத்தும் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாத ஹமாஸ் படையினர், இஸ்ரேல் படையினருக்கு காஸா நகரில் சமாதி கட்டுவோம் என முழக்கமிட்டுள்ளது.

இதற்கிடையே, தேவைப்படும் அளவுக்கு சண்டை நடக்கும். தேவைப்பட்டால், போரை மேலும் நீடிப்போம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எஹூத் பராக் கூறியுள்ளார்.

டிசம்பர் 27ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வராமல் இருப்பதால் மத்திய கிழக்குப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.