ஸ்டாலின், அதிமுக மீது வழக்கு-தேர்தல் ஆணையம் உத்தரவு

மதுரை: திருமங்கலம் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு தேர்தல் அதிகாரியும், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருமான சீத்தாராமனுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல அதிமுக சார்பில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தண்டபாணி மீதும் வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருமங்கலம் தொகுதி தேர்தல் பிரசாரம் முதல் நாளிலிருந்தே அனல் பறந்து வருகிறது. வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுத்ததாக அவர்களில் சிலரை திமுகவினர் கையும் களவுமாக பிடித்தனர்.

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இரு தரப்பும் சரமாரியாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களிடம் புகார்களைக் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொகுதிப் பாதுகாப்புக்காக தற்போது துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் அதிமுக தரப்பில் புதிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது போல இருந்தது.

வாக்காளர்களுக்கு ஸ்டாலினும், அவருடன் வருபவர்களும் பணம் கொடுக்கின்றனர். இது அப்பட்டமான தேர்தல் விதி மீறலாகும் என அதிமுக கூறுகிறது.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறுகையில், ஸ்டாலினும் மற்ற திமுக அமைச்சர்களும் பணம் கொடுப்பது போன்ற வீடியோ வெளியாகியிருப்பது எந்த ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை.

திமுக எப்படியெல்லாம் கீழ்த்தரமாக செயல்படுகிறது என்பதையே இது காட்டுகிறது. தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வாக்காளர்களுக்கு அவர்கள் பணம் கொடுக்கின்றனர் என்றார்.

ஆனால் அதிமுகவின் புகாரை திமுக நிராகரித்துள்ளது. ஸ்டாலின் இருப்பது போன்ற காட்சிகள் சமீபத்திய காட்சிகள் அல்ல. அது தேர்தல் பிரசாரமும் அல்ல. திமுக கட்சி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படத்தை வெட்டி, ஒட்டி, எடிட் செய்து போலி வீடியோவை உருவாக்கியுள்ளனர் அதிமுகவினர்.

திருமங்கலத்திலும் ஸ்டாலின் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அது கட்சி விழா என்று திமுக தரப்பு விளக்கியது.

இந்த நிலையில் ஸ்டாலின் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரித்தது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக மீதும்:

அதேபோல வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது தொடர்பாக கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தண்டபாணி என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பணம் கொடுத்தது தொடர்பாக இரு கட்சிகளும் கொடுத்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் இரு கட்சிகளும் விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக, அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸும் அனுப்பியுள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.