போர் நிறுத்த ஒப்பந்தத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துகிறார் ரணில் விக்கிரமசிங்க

தமிழ் மக்களுடனான போர் நிறுத்த ஓப்பந்தத்தை பயன்படுத்தி சிறிலங்கா சாதித்துக் கொண்டவை எவை என்பதை சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அம்பலப்படுத்தியிருக்கிறார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் நேற்று திங்கட்கிழமை அவர் கூறியதாவது:

சிறிலங்கா படையினரின் அண்மைய வெற்றிகளுக்கு 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தமே வழிவகுத்துக் கொடுத்தது.

போர் நிறுத்த ஒப்பந்த காலத்தில் அரச தரப்பில் கூறியிருந்தபடி நவீன ரக ஆயுதங்களை புலிகள் கொள்வனவு செய்திருந்தால் கடுமையாக எதிர்த்துப் போராடியிருப்பர்.

குறிப்பாக கிழக்கில் படையினரை புலிகள் எதிர்கொள்ளவில்லை. படையினருக்கு எதிராக நவீன ரக ஆயுதங்களை புலிகள் பயன்படுத்தியதாக எதுவித ஆதாரமும் இல்லை.

போர் நிறுத்த ஒப்பந்த காலத்தில்தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிறிலங்காவுக்கு படைய உதவிகள் வழங்கின. ஆனால், மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் மனித உரிமைகள் நிலைமைகள் மிகவும் மோசமடைந்து போனதையடுத்தே படைய உதவிகளை அமெரிக்கா நிறுத்தி விட்டது.

கிளிநொச்சி சமரில் படுகாயமடைந்த படையினரிடம் மகிந்த அரசு நேர்மையாக நடந்து கொள்ளவில்லை.

இந்த நாட்டுக்காக பாரிய தியாகம் செய்த அவர்களை சாதாரண வாகனங்களிலேயே சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இதற்கான ஆதாரங்களாக படங்கள் எம்மிடம் உள்ளன.

போரில் உயிரிழந்த படையினருக்கும் காயமடைந்தோருக்குமான உதவித் தொகைகளை அதிகரித்து வழங்க வேண்டும்.

மகிந்த அரசுக்கு எதிராக ஐ.தே.க. உள்ளிட்ட கட்சிகள் நாளை போராட்டங்களை நடத்த உள்ளன என்றார் அவர்.

Source & Thanks : yarl.com

Leave a Reply

Your email address will not be published.