அமெரிக்காவில் வரலாறு காணாத வேலையிழப்பு: வரிக்குறைப்பு செய்ய ஒபாமா யோசனை

வாஷிங்டன்: இரண்டாம் உலகப்போர் ஏற்பட்ட காலத்தில் இருந்ததை விட, அமெரிக்கப் பொருளாதாரம் மோசமான நிலையில் சிரமப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 50 லட்சம் பேர் வேலையிழந்திருக்கின்றனர். இதே நிலை நீடிக்காமல் இருக்க, பொருளாதாரத்தில் ஊக்குவிப்பு ஏற்படுத்த புதிய அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் ஒபாமா செயல்படத் துவங்கி விட்டார். இம்மாத கடைசியில் ஒபாமா பொறுப்பேற்றதும், வேலையில்லாத் திண்டாட்டம் குறைய, பொருளாதாரத் தேக்கம் ஏற்படாமல் இருக்க அவர் முடிவு எடுத்தாக வேண்டும்.

அதற்காக, அமெரிக்காவின் வரிவிதிப்பில் 31 ஆயிரம் கோடி டாலர் சலுகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் வங்கிகள் திவாலாகும் நிலை ஏற்பட்டதும், அதை மீட்க, அரசு நிதியளித்து உதவி செய்த போதும் நிலைமை சீராகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த 1945ல் இரண்டாம் உலகப்போர் நடந்த போது, அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகளவில் ஏற்பட்டது. அதை விட மோசமான நிலை தற்போது இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் ஐந்து லட்சம் பேர் வேலையிழந்திருக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்கா சந்திக்காத வகையில் தொழில் துறையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. ஆட்டோ தொழில் கடந்த 14 ஆண்டுகளாக இல்லாத வகையில் நசிந்து விட்டது. கார்கள் முதல் நாற்காலி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கு கடந்த இரு மாதங்களாக புது ஆர்டர் ஏதும் இல்லை. மான்யூபாக்சரிங் தொழிலில் ஒரு லட்சம் பேர் வேலையிழந்து விட்டனர். பராக் ஒபாமா, தன் ரேடியோ உரையில், ‘அமெரிக்கா மிக மோசமான பொருளாதார சூழ்நிலையை சந்திக்கிறது’ என்று, வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதில் அவர், ‘இப்போது நாம் தைரியமாக, விரைவாக முடிவு எடுத்து செயல் படுத்தவில்லை என்றால், இன்னமும் மோசமான பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படும். வேலைவாய்ப்பும் அதிகளவு குறைந்து மேலும் பலர் வேலையிழப்பர்’ என்று, குறிப்பிட்டிருக்கிறார். அதிபர் பதவியில் பொறுப்பேற்கும் முன் அமெரிக்க நடைமுறைப்படி சில முக்கிய ஆலோசனைகளை ஒபாமா மேற்கொண்டிருக்கிறார். அதன் அடிப்படையில், அடுத்த கட்டமாக வர்த்தக சமூகத்தினர் மற்றும் மத்திய தர வகுப்பினர் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால், கணிசமாக வரிக் குறைப்பு செய்ய வேண் டும் என்ற கருத்து ஏற்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் முதல் கட்டமாக 31 ஆயிரம் கோடி டாலர் வரிக்குறைப்பு சலுகை தர திட்டமிட்டிருக்கிறார்.தவிரவும், அரசு வரி வருவாய் குறைந்தும் செலவு அதிகரித்தும் இருப்பதால், நடப்பு 2009ம் ஆண்டு மிகவும் சிக்கலாக இருக்கும் என்று சீனாவின் நிதியமைச்சர் ஜி ஜுரன், பீஜிங்கில் நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்தார். குவைத் வங்கிகள் தத்தளிப்பு: ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் குவைத் போன்ற நாடுகளில் உள்ள வங்கிகள் நிதி ஆதாரமின்றித் தவிக்கின்றன. காரணம், ரியல் எஸ்டேட் தொழிலில் யூக வர்த்தகத்தில் அதிக பணம் செலுத்தியதும், தனிநபர் கடனை கட்டுப்பாடின்றி கொடுத்ததாலும், தற்போது வங்கிகள் நிதி நெருக்கடியைச் சந்திக்கின்றன. ஐக்கிய அரபுக் குடியரசு நாட்டில் உள்ள வங்கிகள் அளித்த மொத்தக் கடனில் 35 சதவீதத்திற்கு மேல் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வழங்கப்பட்ட கடன்கள். அவைகளை திரும்ப வசூலிக்க முடியாத பொருளாதார சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை இறக்கம், பொருளாதார சூழ்நிலை பாதிப்பு, ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி ஆகியவை இந்த கலக்கத்திற்கு காரணம். குறிப்பாக அபுதாபி கமர்சியல் வங்கி, எமிரேட்ஸ் என்.பி.டி., வங்கி ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது கடன் தருவது என்பதில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.