பாலஸ்தீனத்தில் மீண்டும் ரத்த ஆறு

பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் நீண்ட காலமாக நடந்து வரும் போர், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.பாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டிஷார் வெளியேறிய பின் யூதர்களின் தாயகமான இஸ்ரேல் 1948ம் ஆண்டு உருவானது. அங்கு வாழ்ந்து கொண்டிருந்த பாலஸ்தீன அரேபியர்கள் நாடற்ற அகதிகளாயினர். பெரும்பாலானோர் ஜோர்டான் ஆற்றுக்கு மேற்குப் பகுதியில் குடியேறினர்.அப்பகுதியை ஜோர்டான் ஆக்கிரமித்துக் கொண்டது. நாடு இல்லாத பாலஸ்தீனர்களிடம் அரபு நாடுகளே பரிவுடன் நடந்து கொள்ளவில்லை. மாறாக தொல்லைதான் அளித்தன.

யூதர்களின் புனித இடமாகக் கருதப்படும் ஜெருசலத்தின் மீது இஸ்ரேல் பாரம்பரிய உரிமை கோருவதும், அப்பகுதி அமைந்துள்ள காசா பகுதியை தங்கள் தாயகமாக பாலஸ்தீனர்கள் கருதியதும் தான் முன் பிரச்னை துவங்கியதன் அடிப்படை.கடந்த 1964ம் ஆண்டில் யாசர் அராபத் பாலஸ்தீனர்களுக்கு தாயகம் வேண்டும் கோரி பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை நிறுவினார். 1967ம் ஆண்டில் நடந்த போரில் காசா பகுதி மற்றும் மேற்குக்கரை பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.அன்று முதல் இன்று வரை பாலஸ்தீனத்தில் முழுமையான அமைதி திரும்பவில்லை.கடந்த 1993ம் ஆண்டு செப்டம்பரில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே வாஷிங்டனில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் காசா மற்றும் மேற்குக்கரையிலிருந்து வெளியேற இஸ்ரேல் சம்மதித்தது. 1995ம் ஆண்டிலும் இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ராபினுடன் அராபத் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.காசா மற்றும் மேற்குக் கரையில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, 1996ம் ஆண்டு ஜன., 21ம் தேதி அராபத் அதிபரானார். அமைதி ஒப்பந்தங்களுக்கு பயங்கரவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

அமைதி முயற்சியில் பின்னடைவாக, 2002ம் ஆண்டு மேற்குக்கரை நகரங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா மற்றும் ஐ.நா., இணைந்து, 2003ம் ஆண்டில் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முயன்றன. அப்போதைய அமைதி ஒப்பந்தப்படி பாலஸ்தீனப் பகுதியிலிருந்து வெளியேற இஸ்ரேல் சம்மதித்தது.கடந்த 2004ம் ஆண்டு யாசர் அராபத் மரணம் அடைந்தார். பாலஸ்தீன அதிபராக அப்பாஸ் பொறுப்பேற்ற பின், 2005ம் ஆண்டில் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் படைகளை விலக்கியது.கடந்த 2006ம் ஆண்டிலிருந்து பாலஸ்தீனத்தில் உள்ள இரு கட்சிகளான படா மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்ட மோதல் அந்நாட்டில் எரிந்து கொண்டிருக்கும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போல் ஆனது.இவ்விரு கட்சிகளும் பாலஸ்தீனத்தின் இருவேறு நில துண்டு பகுதிகளான மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளை தங்கள் நிர்வாகக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தன. மேற்குக்கரையை பாலஸ்தீன தேசிய நிர்வாகமும், காசா பகுதியை ஹமாசும் நிர்வகித்து வருகின்றன.உள்நாட்டில் அதிக பிரச்னைகளுக்குக் காரணமாக அமைந்துள்ள ஹமாஸ் இயக்கத்தை இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளன.காசா பகுதியில் நடந்த தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்ற போதிலும் கூட, 2007ம் ஆண்டு நவம்பரில் அமெரிக்காவில் நடந்த இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் அழைக்கப்படவில்லை. அதற்குக் காரணம் அந்த இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கை தான்.கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட் தாக்குதலை ஹமாஸ் நடத்தியிருக்கிறது.

அதே சமயம், பாலஸ்தீனத்தின் இன்னொரு பகுதியான மேற்குக்கரையில் இஸ்ரேல் தனது குடியிருப்புகளை ராணுவத்தின் உதவியுடன் விரிவாக்கம் செய்து வருகிறது.இவ்வாறு இருதரப்பினரும் அமைதி ஒப்பந்தங்களின் வழி பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை என்பது தான் தற்போதைய பிரச்னைக்கான காரணம். ஹமாசின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்பதற்காகத் தான் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.””இன்னொரு முறை காஸா பகுதியை நாங்கள் ஆக்கிரமிக்கப் போவதில்லை. ஆனால், ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்கத்தான் இந்த நடவடிக்கை,” என்று கூறியிருக்கிறார் இஸ்ரேல் அதிபர் சிமோன் பெரஸ்.அங்குள்ள சூழ்நிலையைப் பார்க்கும் போது, மீண்டும் காஸா பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்போவதாகத் தான் தோன்றுகிறது.

பாலஸ்தீனத்துக்கு இதுவரையில் தனி நாடு அந்தஸ்து இல்லாத நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகள் இருவேறு நாடுகளாக அங்கீகாரம் பெறுவது தான் இப்பிரச்னைக்கான தீர்வு. இஸ்ரேலிலும், பாலஸ்தீனத்திலும் உள்ள மக்களே இதில் உறுதியாக உள்ளனர்.மேற்குக்கரை பகுதி, காஸா ஆகிய இரு பகுதிகளை உள்ளடக்கியதாக பாலஸ்தீனம் அமைய வேண்டும் என்று பாலஸ்தீனர்கள் விரும்புகின்றனர். இது இஸ்ரேல் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. போரை இருதரப்பு மக்களில் யாரும் விரும்பவில்லை. ஆள்பவர்கள் விரும்புவதால் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது; பாலஸ்தீனத்தில் ரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.