ராணுவத்தை மிரள வைக்கும் புலிகளின் ‘பங்கர்கள்’! (06.01.2009) செய்திகள்.

கொழும்பு: கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க நிர்வாக அலுவலகங்களைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள பங்கர்கள் (பதுங்கு குழிகள்) எத்தகைய தாக்குதலையும் சமாளிக்கக் கூடிய இரும்புக் கோட்டைகள் போல இருப்பதைப் பார்த்து இலங்கை ராணுவத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.

விடுதலைப் புலிகளின் தலைநகரான கிளிநொச்சி தற்போது ராணுவத்தின் கைக்கு வந்துள்ளது. அங்கு மனித நடமாட்டமே இப்போது இல்லை. ராணுவத்தினர் மட்டுமே உள்ளனர். தெருவில் நாய்களும், மாடுகளும்தான் திரிவதாக இலங்கை மீடியாக்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் பல்வேறு அலுவலக கட்டடங்களை ராணுவத்தினர் தற்போது சோதனையிட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு அலுவலகத்திற்கு வெளியேயும் பங்கர்கள் காணப்படுகின்றன. இந்த பங்கர்களைப் பார்த்து ராணுவத்தினர் அதிர்ந்து போய் விட்டனராம். காரணம், அந்த அளவுக்கு இரும்புக் கோட்டை போல படு வலுவுடனும், நவீனமாகவும் அவை காணப்படுவதே.

2ம் உலகப் போரின்போது நாஜிக்கள் இதுபோன்ற பங்கர்களைத்தான் பயன்படுத்தினர் என்று கூறப்படுகிறது. ஆனால் அதை விட மிக மிக வலுவாக உள்ளதாம் புலிகளின் பங்கர்கள்.

கிளிநொச்சி முழுவதும் புலிகளின் பங்கர்கள் ஏராளமாக உள்ளன.

இந்த பங்கர்கள் தேக்கு மரத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சரமாரியான குண்டு வீச்சையும் தாங்கக் கூடிய வகையில், மிக மிக வலுவானதாக உள்ளன. உள்ளே நவீன முறையில் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. பல பங்கர்களில் குளிர்சாதன வசதியும் கூட உள்ளனவாம்.

சில பங்கர்கள் வெளியில் தெரியும்படி உள்ளன. சில பங்கர்கள் முழுமையாக பூமிக்குள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற பங்கர்களுக்குள்தான் பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும், முக்கியப் பிரமுகர்களையும் விடுதலைப் புலிகள் இயக்க நிர்வாகிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஹிட்லர் காலத்தில்தான் பங்கர்கள் மிகப் பிரபலமாக இருந்தன. ஹிட்லரே கூட தனக்கென ரகசிய பங்கர்களை அமைத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

அதற்கு அடுத்து தற்போது விடுதலைப் புலிகளின் பங்கர்கள்தான் மிகப் பிரபலமாகியுள்ளன.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.