பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளித்தது இந்தியா

டெல்லி: மும்பைத் தீவிரவாத தாக்குதல் தொடர்பான அனைத்து முக்கிய ஆதாரங்களையம் பாகிஸ்தானிடம் இந்தியா ஒப்படைத்து விட்டதாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்புகள் குறித்த அனைத்து முக்கிய ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் ஒப்படைத்து விட்டோம்.

அனைத்து உலக நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கும் மும்பைத் தாக்குதல் தொடர்பாக நான் கடிதம் எழுதியுள்ளேன்.

பாகிஸ்தான் தூதர் ஷாஹித் மாலிக்கை வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைத்து அவரிடம், மும்பைத் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களும் வழங்கப்பட்டு விட்டது.

பாகிஸ்தான் தான் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற அவசர கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீவிரவாத மிரட்டலை ஒடுக்க உலக நாடுகள் ஒருங்கிணைய வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன், விரும்புகிறேன் என்றார்.

வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்ட ஷாஹித் மாலிக்கிடம், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் ஆதாரங்களை ஒப்படைத்தார்.

மேலும் இந்தியாவில் தங்கியுள்ள அனைத்து நாட்டு தூதர்களுக்கும் மும்பை தாக்குதல் தொடர்பான அனைத்து விவரங்களும் இன்னும் 24 மணி நேரத்தில் தெரிவிக்கப்படவுள்ளதாகவும் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

முகம்மது அஜ்மல் கஸாப்பிடம் நடந்த விசாரணை குறித்த விவரங்கள், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகள், மும்பைத் தாக்குதலில் எந்த வகையில் தொடர்பு கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரம், மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், கருவிகள் உள்ளிட்டவற்றின் மூலம் தெரிய வந்துள்ள பாகிஸ்தானிய தொடர்புகள் குறித்த விவரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அமெரிக்காவிடம் இந்த ஆதாரங்கள் நேரில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Source & Thanks : aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.