இலங்கையை விட்டு பிரபாகரன் ஓட மாட்டார்: கருணா

Karuna
கொழும்பு:விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டு இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்லலாம் என்று கூறப்படுவது தவறானது. அவர் எந்த சூழ்நிலையிலும் இலங்கையை விட்டு வெளியேற மாட்டார் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை நிறுவியவரும், அதன் எம்.பியுமான கருணா கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிய தளபதியாக விளங்கியவர் கருணா. பின்னர் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு தற்போது இலங்கை ராணுவத்தின் பாதுகாப்புடன் புலிகளுக்கு எதிராக உளவு சொல்வது, புலிகள் இயக்கத்தினரின் பலத்தை போட்டுக் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது.

கருணா குழுவினரின் உதவியுடன்தான் கிழக்கு மாகாணத்தை இலங்கைப் படைகள் மீட்டன.

இந்த நிலையில் கிளிநொச்சி வீழ்ந்து விட்டதைத் தொடர்ந்து அடுத்து முல்லைத்தீவுக்கு இலங்கை படைகள் குறி வைத்துள்ளதால் பிரபாகரன் இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்லக் கூடும் என்று பேச்சு கிளம்பியுள்ளது.

ஆனால் இதை கருணா நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பிரபாகரன் இலங்கையை விட்டு இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்வார் என்று நான் நினைக்கவி்ல்லை. அப்படி கூறுவது தவறு.

முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றும் நோக்கில் ராணுவம் முன்னேறி வருகிறது. ஆனால் முல்லைத்தீவு வனப்பகுதியில் ராணுவம் புகுந்து சண்டை போடுவது இயலாத காரியம்.

தற்போது தெற்கு இலங்கைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ஏ-9 நெடுஞ்சாலையை தடைகளற்ற பகுதியாக மாற்றுவதே ராணுவத்தின் முக்கிய குறிக்கோள்.

பிரபாகரன் எந்தச் சூழ்நிலையிலும் இலங்கையை விட்டுப் போக மாட்டார்.

கிளிநொச்சி வீழ்ந்ததைத் தொடர்ந்து, அங்கு புலிகள் படையின் தலைமைப் பொறுப்பேற்றிருந்த ஏரியா கமாண்டர் சொர்ணத்தை தகுதி இறக்கம் செய்துள்ளார் பிரபாகரன்.

ராணுவத்தின் நெருக்குதலால் போர் முனையில் உள்ள புலிகள் இயக்கத் தலைவர்களால், பிரபாகரனின் உத்தரவுகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. அந்த சமயத்தில் என்ன முடிவெடுக்க முடியுமோ அதைத்தான் அவர்களால் செய்ய முடிகிறது என்றார் கருணா.

முல்லைத் தீவை மீட்போம்– பொன்சேகா:

இதற்கிடையே விடுதலைப் புலிகள் வசம் உள்ள முல்லைத்தீவை மீட்போம். இதற்காக 100 படை அணிகள், 50 ஆயிரம் வீரர்கள் முன்னேறி வருகின்றனர் என்று இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா கூறியுள்ளார்.

இதுகுறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், புலிகள் வசமுள்ள முல்லைத் தீவை மீட்க, 100 படை அணிகள், 50 ஆயிரம் வீரர்கள் மற்றும் 6 ரெஜிமெண்டுகளுடன் இலங்கை ராணுவம் முன்னேறி வருகிறது.

வன்னிப் போர்க்களத்தில் ஈழப் போர் – 4 இல் மிகப் பெரிய அளவில் முல்லைத் தீவு போர் அமையும்.

பிரபாகரனுக்கு இரண்டே வழிகள்தான் இப்போது உள்ளன. ஒன்று நாட்டைவிட்டு தப்பியோட வேண்டும். அல்லது தற்கொலை செய்ய வேண்டும். பிரபாகரனை உயிரோடு பிடிப்பது என்பது மிக அதிக சாத்தியமற்றது.

இலங்கை படையானது ஆனையிறவை நோக்கி நகர்கிறது. பரந்தன் மற்றும் முல்லைத்தீவு இடையேயான ஏ-35 வீதியில் முரசுமோட்டையை இலக்கு வைத்திருக்கிறோம்.

விடுதலைப் புலிகளை மீண்டும் ஒன்று சேர விடமாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.