மலேசியாவை கண்டித்து இ.முன்னணி போராட்டம்

சென்னை: மலேசியாவில் இந்துக்கள் கொடுமைபடுத்தப்படுவதை கண்டித்து சென்னையில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாடு நடைபெறும் போது இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

இது குறித்து அதன் அமைப்பாளர் ராம. கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மலேசியாவில் இந்துக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. கல்வி கற்கவும், வியாபாரம் செய்வதற்கும், தொழில் தொடங்குவதற்கும் சுதந்திரம் இல்லை. தமிழர்கள் குறிப்பாக, இந்துக்கள் மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். இந்துக்களிடம் பாரபட்சம் காட்டப்படுகிறது.

தன்மானத்துடனும், பாதுகாப்புடனும் வாழ இயலாத நிலையை மலேசிய அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது. இத்தனைக்கும் மலேசிய பொருளாதார வளர்ச்சியில் இந்துக்களின் பங்கு மிகக் கணிசமானது என்பதை உலகம் அறியும்.

மலேசியா வளர்ச்சிக்காக ரத்தத்தையும், கண்ணீரையும், வியர்வையையும் சிந்திய இந்துக்கள் கொடுமைப்படுத்தப்படுவதை கண்டித்து வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான மாநாடு சென்னையில் நடைபெறும்போது இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தும்.

கட்சி உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு மலேசிய தமிழர்களுக்காக அனைவரும் இதை ஆதரிக்க வேண்டும்.

மத்திய அரசு, மலேசியா இந்துக்களை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மலேசியா இந்துக்களுக்காக போராடிய ஒரே காரணத்திற்காக கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘ஹிண்ட்ராப்’ தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

மலேசியா அமைச்சர் சுப்பிரமணியம் சிறையில் இருப்பவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என அறிவித்திருக்கும் வாக்குறுதி நம்பத் தகுந்ததாக இல்லை. வெறும் வாக்குறுதிக்கு பதிலாக உருப்படியான நடவடிக்கைகளை மலேசியா அரசாங்கம் எடுக்க வேண்டுமென்று நூறு கோடி இந்துக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.