இலங்கை விமானப் படைக்கு இந்தியா உதவி?-ராஜா

டெல்லி: இலங்கை விமானப் படைக்கு உதவி செய்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரிகள் இலங்கை சென்றதாகக் கூறப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

அக் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையி்ல்,

இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவி வழங்கியதன் மூலம் அங்குள்ள தமிழர்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே துரோகம் விளைவித்தது. இந் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த அனைத்துக் கட்சி குழுவினரிடம், இலங்கை பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்திருந்தது.

அந்த உறுதிமொழியை நிறைவேற்றாததன் மூலம், இலங்கை தமிழர்களின் நலனுக்கு மீண்டும் துரோகம் செய்துவிட்டது.

இனியாவது, இலங்கை தொடர்பான தனது கொள்கையை மாற்றியமைத்து, பிரணாப் முகர்ஜியை உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை பிரச்சினையில், மத்திய அரசின் கொள்கை என்ன, போர் முடிவுக்கு வரும்வரை காத்திருக்க முடிவு செய்து இருக்கிறதா என்பதையும் விளக்க வேண்டும்.

25 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை உடனடியாக நிறுத்தி, இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.

போரை தொடர்வதுதான் தீர்வு என்று ராஜபக்சே அரசு கருதக்கூடாது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதுதான் ஒரே வழியாகும். தமிழர்கள் அங்கு அமைதியுடன் வாழ்வதற்கும், அவர்களுடைய சட்டபூர்வமான உரிமைகள் கிடைப்பதற்கும் இந்தியா உதவி செய்ய வேண்டும்.

மத்தியில் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும், இந்த அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் பொறுப்பு உண்டு. தனது பசப்பு வார்த்தைகள் மூலம் தமிழக மக்களை திமுக இனியும் ஏமாற்ற முடியாது. இந்த பிரச்சனையில், திராவிட கட்சிகள் தங்கள் பொறுப்புகளை தட்டிக்கழித்துவிட முடியாது.

மத்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி அளிக்கக் கூடாது. இலங்கை விமானப் படைக்கு உதவி செய்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரிகள் இலங்கை சென்றதாக கூறப்படும் தகவல் பற்றியும் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்.

தொடர்ந்து நடைபெற்று வரும் போரினால், இலங்கையின் வடக்குப் பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவும் மருந்து பொருட்களும் தடையின்றி கிடைக்கும்படி உலக நாடுகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார் ராஜா.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.