பிரபாகரனை உயிருடன் பிடிப்பதே குறிக்கோள்: பொன்சேகா

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முல்லைத்தீவில் பதுங்கியிருக்கிறார். அவரைக் கண்டுபிடித்து உயிருடன் பிடிப்பதே எங்களது நோக்கம் என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

கிளிநொச்சி மற்றும் ஆணையிறவை ராணுவம் பிடித்துள்ள நிலையில் தற்போது முல்லைத்தீவை குறி வைத்துள்ளனர். புலிகளின் கடைசி புகலிடமாக இது கருதப்படுகிறது.

முல்லைத்தீவில்தான் தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முல்லைத்தீவு வனப்பகுதியில் மிக மிக பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ள 30 அடி ஆழ பதுங்கு குழியில் சகல பாதுகாப்புடன் பிரபாகரன் தங்கியுள்ளார்.

அவரது இடத்தை அவ்வளவு எளிதில் யாரும் அறிந்து கொள்ள முடியாதபடி படு ரகசியமான இடத்தில் பதுங்கு குழி இருக்கிறதாம்.

பிரபாகரன் உள்ள பகுதியைச் சுற்றி சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலான பகுதிகள் புலிகள் வசம் உள்ளது. இந்தப் பகுதியை தற்போது ராணுவம் குறி வைத்துள்ளதாக ராணுவத் தளபதி பொன்சேகா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 40 கிலோமீட்டர் சுற்றவில்தான் தற்போது விடுதலைப் புலிகள் உள்ளனர். முல்லைத்தீவில் பிரபாகரன் பதுங்கியிருப்பதாக கருதப்படும் இடத்தை ராணுவம் குறி வைத்துள்ளது.

பிரபாகரனை உயிருடன் பிடிப்போம். அதுவே ராணுவத்தின் குறிக்கோளாகும் என்றார் அவர்.

பிரபாகரன் தங்கியிருக்கும் பங்கர் மறைவிடம் குறித்து ஏற்கனவே பலமுறை செய்திகள் வெளியாகியுள்ளன. மிகுந்த பாதுகாப்புடன் கூடிய அந்த பதுங்கு குழி, குளிர்சாதன வசதி செய்யப்பட்டதாகும். இரவில் மட்டுமே அங்கிருந்து வெளியே வருவார் பிரபாகரன்.

பிரபாகரன் தங்கியுள்ள பதுங்கு குழிக்குள் மிக மிக சிலர் மட்டுமே செல்ல முடியும். யாரும் எளிதில் அண்ட முடியாத அளவுக்கு மிகவும் பலமான பாதுகாப்புடன் கூடியது பிரபாகரன் தங்கியுள்ள பதுங்கு குழி என்பது குறிப்பிடத்தக்கது.

சக்தி வாய்ந்த குண்டு வீச்சையும் தாக்குப் பிடிக்கும் வகையில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டது இந்த பதுங்கு குழி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.