பாகிஸ்தானுக்காக அணு ஆயுத சோதனையை நடத்திய சீனா!

வாஷிங்டன்: 1990ம் ஆண்டு பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அது தயாரித்த அணு ஆயுதத்தை சீனா சோதித்துப் பார்த்துக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்துதான், இந்தியா பொக்ரானில் அணு ஆயுத சோதனையை நடத்தியதைத் தொடர்ந்து குறுகிய காலத்தில் பாகிஸ்தான் தனது அணு ஆயுத சோதனையை நடத்த முடிந்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் விமானப்படை செயலாளர் தாமஸ் ரீட் என்பவர் தெரிவித்துள்ளார்.

The Nuclear Express: A Political History of the Bomb and Its Proliferation என்ற நூலில் இதுகுறித்த விரிவான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், பாகிஸ்தான் விஞ்ஞானிகளுக்கு சீனா மிகப் பெரிய அளவில் பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளது. சீனாவுக்கு அவர்களை வரவழைத்து அங்கு நேரடி விளக்கத்தையும், பயிற்சியையும் அது அளித்தது.

மேலும், சிஎச்ஐசி-4 என்கிற அணு ஆயுதத்தைத் தயாரிக்கும் வடிவமைப்புகளையும் அது பாகிஸ்தானுக்கு வழங்கியது.

மிகவும் அபாயகரமானது என்று தெரிந்தும் கூட பாகிஸ்தானுக்கு அணு ஆயுதம் தொடர்பான தொழில்நுட்பத்தை முழு அளவில் வழங்கி உதவியுள்ளது சீனா.

இதற்கு, இந்தியா, சீனாவின் எதிரி. அதேபோல பாகிஸ்தான், இந்தியாவின் எதிரி என்பதுதான் ஒரே காரணம்.

பாகிஸ்தான் பிரதமராக பெனாசிர் பூட்டோ இருந்தபோதுதான், முதல் அணு ஆயுதத்தை அந்த நாடு தயாரித்தது. பூட்டோ அலுவலகம் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே சீனா அந்த அணு ஆயுதத்தை சோதித்துப் பார்த்தது.

இதையடுத்துதான் 1998ம் ஆண்டு இந்தியா பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தியபோது எளிதாக உடனடியாக அணு ஆயுத சோதனையை பாகிஸ்தானால் நடத்த முடிந்தது என்று கூறியுள்ளார் ரீட்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.