முல்லைத்தீவு முற்றுகை – புலிகள் தாக்குதலில் 60 ராணுவத்தினர் பலி

கிளிநொச்சி: பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கி முன்னேறிய ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 60 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இது குறித்து விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை நோக்கி இலங்கை பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மும்முனைகளில் முன்னேறத் தொடங்கினர்.

இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிரத் தாக்குதல் நடத்தினர். பிற்பகல் வாக்கில் படையினரின் முன்னேற்றத்தை புலிகள் தடுத்து நிறுத்தினர்.

இந்த மோதலில் ராணுவத்தினர் 60 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ராணுவத்தினரிடமிருந்து ஏராளமான துப்பாக்கிகளையும் புலிகள் கைப்பற்றினர்.

முல்லைத்தீவு புலிகளின் ராணுவத் தலைமையகமாக விளங்குகிறது. வனப் பகுதி நிரம்பிய இந்த மாவட்டம் முழுமையாக தற்போது புலிகள் வசம் உள்ளது.

முல்லைத்தீவிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் தற்போது ராணுவம் நிலை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

முல்லைத்தீவைப் பிடிக்கும் பொறுப்பு பிரிகேடியர் நந்தனா உதவத்தா தலைமையிலான 59வது படைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவின் மேற்கிலிருந்தும், கடற்கரை கழிமுகப் பகுதியிலிருந்தும் இந்தப் படைப் பிரிவினர் முல்லைத்தீவு நோக்கி முன்னேறி வருகின்றனர்.

ஒட்டு சுட்டானுக்குள் நுழைந்தது ராணுவம்

இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானுக்குள் நுழைந்து விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

14வது சிங்கள ரெஜிமென்ட்டின் தளபதியான மேஜர் பெரேரா தலைமையில், லெப்டினென்ட் கர்னல் ஹதங்கொடா தலைமையிலான 642வது படைப்பிரிவு ஒட்டுசுட்டானுக்குள் நுழைந்திருப்பதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

மாங்குளம்-முல்லைத்தீவு இடையேயான ஏ-34 சாலையில், ஒட்டுசுட்டான் சந்தி பிரதான சந்திப்பாகும்.

விடுதலைப் புலிகள் இந்த சாலையை தங்களது போக்குவரத்துக்கு முக்கியமாக பயன்படுத்தி வந்ததாக ராணுவம் கூறுகிறது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.