கிளிநொச்சிக்கு அடுத்து ஒட்டுச்சுட்டான் வீழ்ந்தது

கொழும்பு:முல்லைத் தீவு அருகே ஒட்டுச்சுட்டான் என்ற முக்கிய நகரத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, முல்லைத் தீவை நோக்கி ராணுவம் வேகமாக முன்னேறி வருகிறது.இலங்கை ராணுவ அமைச்சகம் கூறியதாவது:கிளிநொச்சியை மீட்ட பிறகு, ராணுவத்தினர் முல்லைத் தீவு மீது கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.

மாங்குளம்-முல்லைத் தீவு சாலையில் உள்ள ஒட்டுச்சுட்டான் அருகே கடந்த இரண்டு நாட்களாக கடும் சண்டை நடந்தது. தரை வழியாகவும், விமானங்கள் மூலமாகவும் இங்கு தாக்குதல் நடந்தது. புலிகளின் எதிர்ப்பை முறியடித்து, ஒட்டுச்சுட்டான் நகருக்குள் ராணுவம் நேற்று வெற்றிகரமாக நுழைந்தது.தங்களது நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை செயல்படுத்த, ஒட்டுச்சுட்டான் நகரைத் தான் புலிகள் பயன்படுத்தி வந்தனர்.

ஒட்டுச்சுட்டானில் இருந்து முல்லைத் தீவை எளிதாக அடைய முடியும். தற்போது, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஒட்டுச்சுட்டான் வந்துள்ளதன் மூலம், முல்லைத் தீவை நோக்கி முன்னேறும் நடவடிக்கை ராணுவத்துக்கு எளிதாகியுள்ளது.முல்லைத் தீவில் பதுங்கியுள்ள விடுதலைப் புலிகள் மீது எளிதாக தாக்குதல் நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கிளிநொச்சியின் வடகிழக்கு மற்றும் பரந்தன் அருகே உள்ள இடங்களில் நேற்று ராணுவ ஹெலிகாப்டர்கள், சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. ஆனையிறவு பகுதியிலும் கடும் சண்டை நடந்தது.இவ்வாறு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நானயக்கரா கூறுகையில், “புலிகள் தலைவர் பிரபாகரன், முல்லைத் தீவில் அடர்ந்த வனப் பகுதியில் உள்ளதாக தெரிகிறது. அங்கு, தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.

அவரால் ஒரே இடத்தில் நிலையாக தங்கியிருக்க முடியாது. இருந்தாலும், முல்லைத் தீவு மாவட்டத்தை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது’ என்றார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.