தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்களும், பின்னடைவுகளும் ஒன்றும் புதியவையும் அல்ல. நிரந்தரமானவையும் அல்ல.

posted in: தமிழீழம் | 0

களத்திலிருந்து ஆதிரையன்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு அது பல்வேறுபட்ட நெருக்கடிகளையும், அழுத்தங்களையும், பின்னடைவுகளையும், சூழ்ச்சி வலைகளையும், துரோகங்களையும் சந்தித்திருக்கிறது.

விடுதலைக்காக வீறுகொண்டெழுந்த போராட்ட இயக்கங்கள் “தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு’ என்ற குறிக்கோளுடன் களத்தில் இறங்கினாலும் ஒவ்வொன்றினதும் செயற்பாடுகளும் வெகுஜனப் போராட்ட நடவடிக்கைகளும், அவற்றின் செயற்திறனும் மாறுபட்டு, முரண்டுபட்டு இலட்சியத்தின் பால் வீறுநடை போடமுடியாமல் ஈழத்தமிழரிடையே ஒரு அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்தவிருந்த வேளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாதையை செப்பனிட்டு நேர்ப்படுத்தி விடுதலைப் போராட்டத்தை தலைமை ஏற்று விடுதலைப் புலிகள் இயக்கம் அன்றைய காலகட்டத்தின் நெருக்கடிகளை எல்லாம் சாதுரியமாக தீர்வுகண்டு முதலாம் கட்ட ஈழப்போரின் முடிவில் யாழ். குடாநாட்டையும் கிளிநொச்சி நகரப்பகுதி தவிர்ந்த மாவட்டத்தின் பெரும்பகுதியையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

கிளிநொச்சியின் இராணுவக் கேந்திரத்தன்மையை 1984 ஆம் காலப்பகுதியில் உணர்ந்ததனாலேயே மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ கிளிநொச்சியில் தங்கியிருந்து போராளிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டவேளை 1985 ஆம் காலப்பகுதியில் கிளிநொச்சி இராணுவப் பொலிஸ் நிலையம் மீது முதலாவது வாகன குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலுடன் கிளிநொச்சி நகரத்தின் மீதான அழிவுத் தாக்குதல்கள் ஆரம்பமாகி இன்றுவரை அந்நகரம் மாறிமாறி மிகப்பெரும் அழிவுகளைச் சந்திப்பது அந்நகரத்தின் துரதிஷ்டமே. வடமாகாணத்தின் முக்கியமான விவசாய வர்த்தக நகராக உருவெடுத்த கிளிநொச்சி பின்நாளில் தமிழரின் இராஜதந்திர நகரம் என்று உலகளாவிய ரீதியில் அறியப்படும் அளவிற்கு அதன் வளர்ச்சி அபரிமிதமானது. 1985ஆம் ஆண்டு வாகனக் குண்டுத் தாக்குதலுடன் ஆரம்பமாகிய கிளிநொச்சி மீதான படைநடவடிக்கைகள் இந்திய இராணுவ வருகையுடன் மேலும் சிதைவுகளைச் சந்தித்தது.

இந்திய இராணுவம் வெளியேறியபின் 1990 ஆம் ஆண்டு 2ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானவுடன் கிளிநொச்சி நகரத்தை கைப்பற்றுவதற்காக புலிகள் இயக்கம் உக்கிரமான முற்றுகைத் தாக்குதல்களை மேற்கொண்டது. அப்போது இராணுவத்தினர் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி நோக்கி ஒரு மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள இதனைப்பயன்படுத்தி கிளிநொச்சியிலிருந்த இராணுவத்தினர் ஆனையிறவுக்குத் தப்பிச்சென்றனர். இந்த இரு பகுதியினரும் மேற்கொண்ட மீட்புச் சண்டையினால் கிளிநொச்சி நகரம் இரண்டாவது தடவையாகவும் பெரும் அழிவைச் சந்தித்தது. ஆனால் இதன்மூலம் ஆனையிறவுக்குத் தெற்கே கிளிநொச்சி மாவட்டத்தின் முழுப்பகுதியும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.

கிளிநொச்சி மீண்டும் புத்துயிர் பெற்று வன்னியின் வர்த்தக மையமாக வளர்ச்சியடையத் தொடங்கிய போதிலும் 3ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானதும் யாழ். குடா புலிகளின் கையிலிருந்து நழுவியபின் 1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவமுகாமை புலிகள் மீட்டுவிட, அன்றைய சந்திரிக்கா அரசாங்கம் கிளிநொச்சி மீது 1996 இல் சத்ஜெய 01, 02, 03 என மூன்று மிகப்பெரிய இராணுவ நடவடிக்கைகளைச் செய்து கிளிநொச்சி நகரத்தையும், அதன் தெற்கே ஏ9 வீதியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி வரை கைப்பற்றியது. 1997 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடல் தாக்குதல்கள் அதிகரித்தன. யாழ்ப்பாணத்திற்கான கடற்போக்குவரத்திற்கு கடற்புலிகளினால் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரும் தடையினால் யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதையின் அவசியத்தை உணர்ந்த அரசு யாழ்ப்பாணற்கான தரைவழிப்பாதை திறப்பு எனக்கூறிக் கொண்டு 1997 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.

வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி ஏ9 பாதையூடாக மாங்குளத்தைக் கடந்து கிளிநொச்சியில் தரித்து நின்றவர்களும் மாங்குளம் வந்தவர்களும் கைகுலுக்குவதற்கு தயாரான போது, கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 1998 ஆண்டு ஜனவரி மாதம் புலிகள் மேற்கொண்ட ஊடறுப்புத் தாக்குதல், அதன் பின்னர் 1998 செப்டெம்பர் மாதம் கிளிநொச்சி நகரத்தின் மீது புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் 2 நடவடிக்கை ஆகியவற்றின் மூலம் கிளிநொச்சி நகரம் மீண்டும் விடுதலைப்புலிகளின் ஆளுகையின் கீழ் வந்தது. ஆனால், 1985 இலிருந்து 1998 செப்டெம்பர் வரை கிளிநொச்சி நகரம் கண்ட பல இராணுவப் பலப்பரீட்சைகளும், அதனால் மூண்ட கடும் சண்டைகளும் அந்நகரத்தினை மண்மேடாக்கிவிட்டுப் போய்விட்டது.

1998 செப்டெம்பர் கிளிநொச்சி நகரம் புலிகளால் கைப்பற்றப்பட்டாலும் அது இராணுவ தாக்குதல் வளையத்துக்குள் தொடர்ந்தும் உட்பட்டதாகவே இருந்தது. 1999 நவம்பர் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் வன்னிப் பெருநிலப்பரப்பை புலிகள் கைப்பற்றியதோடு கிளிநொச்சிக்கான அச்சுறுத்தலாக இருந்த ஆனையிறவு கூட்டுப்படைத்தளமும் வீழ்ச்சியடைந்தது. இதனால் கிளிநொச்சி மாவட்டத்தின் முழுப்பரப்பளவும் அதாவது இரணைமடுச் சந்தியிலிருந்து முகமாலை வரையான பகுதிகள் புலிகளின் கைகளில் வீழ்ந்தன.

போரின் கோரவடுக்களால் மண்மேடாகிக் கிடந்த கிளிநொச்சி நகரம் மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கிற்று. அத்தோடு வன்னிக்கான நிர்வாக மையமாகவும், விடுதலைப்புலிகளின் நிர்வாக மையமாகவும் மாற்றமடையத் தொடங்கியது. அதுமட்டுமல்லாது, தீச்சுவாலை இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல் மூலம் புலிகளால் நிலைநிறுத்தப்பட்ட இராணுவச் சமநிலையும், இதனால் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையும் சர்வதேச இராஜதந்திரிகளின் கிளிநொச்சி வருகையும், அவர்களின் சமரசப் பேச்சுக்களும் கிளிநொச்சியை சர்வதேச அளவில் புலிகளின் இராஜதந்திர நகரமாக மாற்றியது.

துரித கதியில் மகோன்னத வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்தது என்று செல்வதே பொருத்தம். ஏனெனில், சமாதான ஒப்பந்த காலத்தில் கிளிநொச்சிப் பகுதியெங்கும் மேற்கொள்ளப்பட்ட நிர்மாணப் பணிகளின் வேகமும் அதன் வளர்ச்சியும் சர்வதேச இராஜதந்திரிகளை வியப்புக்குள்ளாக்கியது. இதன் வெளிப்பாடுதான் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் “இரண்டாம் உலகப் போரின் அழிவிலிருந்து ஐரோப்பா மீண்டெழ நீண்ட காலம் எடுத்தது. ஆனால் குறுகிய சில மாதங்களிலேயே வன்னியின் எழுச்சி என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. எனக் குறிப்பிட்டமையாகும். இதிலிருந்து கிளிநொச்சியின் வளர்ச்சியின் போக்கினை நாம் உணரமுடியும்.

மீண்டெழுந்த கிளிநொச்சியின் துரதிஷ்டமோ என்னவோ, சமாதான உடன்படிக்கை முறிவும், கடந்த ஒன்றரை வருடங்களாக கிளிநொச்சியை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையும் பல பரிமாணங்களைத் தாண்டி, 2008 டிசம்பர் 31 இல் பரந்தன் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஜனவரி 2 இல் கிளிநொச்சி நகரத்தினை இராணுவப் பிடிக்குள் மீண்டும் சிக்கவைத்துவிட்டது. இதற்கான போரின் மூலம் கிளிநொச்சி நகரம் அழிந்த நகரமாக மக்கள் அற்ற நகரமாக, பாழடைந்த நகரமாக மாற்றமடைந்து விட்டது. கிளிநொச்சி நகரத்திற்கான படையெடுப்பானது 57 ஆவது டிவிசன், கூஊ1 படையணிகள் முறையே மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், மற்றும் பிரிகேடியர் சவீந்திர சில்வா ஆகியோரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டது.

படையினர் கடந்த மூன்று மாதங்களாக முட்டி மோதி பாரிய இழப்புக்களைச் சந்தித்து பரந்தனூடாக முன்னேறி, ஏ9 வீதியை இரண்டாகப் பிழந்து பெட்டியடித்து நிலைகொண்டு, கிளிநொச்சியை மூன்றுபக்கமும் சூழ்ந்து பரந்தனிலிருந்தும், அடம்பனிலிருந்தும், இரணைமடுச்சந்தியிலிருந்தும் மும்முனைகளில் நகர்ந்து கிளிநொச்சி நகரத்தினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கின்றனர். இதன்மூலம் ஏ9 வீதியில் வவுனியாவிலிருந்து பரந்தனுக்கு அப்பால் உமையாள்புரத்திற்கு அண்மைவரை ஏ9 வீதியையும், அதற்கு மேற்குப் புறமுள்ள மேற்கு வன்னியின் முழுப்பரப்பையும் படைகள் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளன. அத்துடன் கிழக்கு வன்னியின் மாங்குளத்திற்கும், முல்லைத்தீவுக்கும் இடையேயான ஏ34 வீதியின் தென்பகுதியாகிய கிழக்கு வன்னியின் தென்அரைப்பாகம் முழுவதும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கிறது.

கிளிநொச்சி நகரத்தின் முழுப்பகுதியும் இராணுவப் பிடியில் அகப்பட்டதோடு பரந்தனிலிருந்து முல்லைத்தீவு செல்லும் ஏ35 வீதியின் இரண்டாம் மைல்கல்லுக்கு அண்மைவரை படையினர் அண்மித்திருக்கின்றனர். கிளிநொச்சி நகரம் முழுவதும் இறுதிவரை சண்டையிட்ட புலிகளின் படையணிகள் தமது இழப்புக்களை தவிர்க்கும் நோக்கில் படிப்படியாக பின்வாங்கி திருவையாற்றுப் பகுதியிலும் இரணைமடு குளக்கட்டுப் பகுதிலும், வடக்காக முரசுமோட்டை கண்டாவளை, ஊரியான் ஆகிய பகுதிகளை இணைக்கும் ஒரு நேர் கோட்டில் புதிய முன்னரங்கப் பகுதியை நிறுவி நிலையெடுத்திருப்பதாக களமுனைத் தகவலிகளிலிருந்து அறியமுடிகின்றது.

இதன்மூலம் இரணைமடுக்குளத்தின் ஆரம்பத்திலிருந்து ஊரியான் வரையான புதிய முன்னரங்கப் பகுதியில் சண்டைகள் நிகழ்வதற்கு சிறிது காலம் தாமதமாகலாம். ஆனால், புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கியதனால், பரந்தனில் நிலைகொண்டிருக்கும் படைகளுக்கு ஏற்பட்ட உளவுரண் உறுதி அவர்களை ஆனையிறவு நோக்கி நகர உந்துவது இயல்பானதே. எனவே படைகள் உடனடியாக உமையாள்புரப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் புலிகளின் முன்னரங்கை நோக்கி ஒரு பாய்ச்சல் சூட்டோடு சூடாக இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். கிளிநொச்சியின் வீழ்ச்சியானது முகமாலைப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் புலிகளின் படையணிகளுக்கு ஒரு நெருக்கடியை கொடுத்திருக்கிறது என்பது உண்மையே.

ஏனெனில் முகமாலை பகுதிக்கான நேரடி வழங்கல் பாதை முடக்கப்பட்டு விட்டது. எனினும் முகமாலைப் பகுதிக்கான விநியோகங்களை கடல் வழியாகவோ அல்லது சுண்டிக்குளம் வழியாகவோ கடைசிவரை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியும்.எது எப்படியிருப்பினும் ஆனையிறவு நோக்கி படையினர் நகருகின்ற போது கிளாலி முகமாலைப் பகுதிலும் சரி, நாகர்கோவில் பகுதியிலும் சரி, சண்டையிடும் புலிகளின் படையணிகளுக்கு பெரும் நெருக்கஎகள் ஏற்படுவது தவிர்க் முடியாதது. ஏனெனில், முகமாலைக்கும் ஆனையிறவுக்கும் இடைப்பட்ட பச்சிலைப்பள்ளிப் பிரதேசமும், சுண்டிக்குளம் தொடக்கம் நாகர்கோவில் வரையான வடமராட்சி கிழக்குப்பகுதியும் ஒடுங்கலான பிரதேசமாகவுள்ளது.

தற்போதைய நிலையில் அதன் இருபக்கங்களிலும் இராணுவம் நிலைகொண்டிருப்பதோடு பாக்கு வெட்டியில் அகப்பட்டிருக்கும் பாக்கின் நிலையை ஒத்ததாகவே பச்சிலைப்பள்ளி இருக்கின்றது. இவ்வாறு ஒரு நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயிலை புலிகள் தக்கவைப்பதற்கு எத்தகைய வியூகத்தை வகுக்கப் போகின்றார்கள் என்பதையிட்டு இராணுவ விற்பன்னர்கள் மண்டையைப் பிய்க்கத் தொடங்கிவிட்டனர். எனினும் முகமாலைப் பகுதியை எத்தகைய இக்கட்டான சூழ்நிலைகள் வந்தாலும் தக்கவைப்பதற்கு புலிகள் முனைவர். கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமை முல்லைத்தீவு நோக்கிய நகர்வின் முனைப்பினை மேலும் தீவிரப்படுத்தக் கூடும்.

59ஆவது டிவிசன் மணலாற்றுப் பகுதியிலிருந்து நகர்ந்து ஏ34 வீதியில் கூழாமுறிப்பு, முள்ளியவளை, தண்ணீரூற்று ஆகியவற்றைக் கைப்பற்றியதோடு முல்லைத்தீவின் நுழைவாயிலான நீராவிப்பிட்டி வரை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததோடு, வீதியின் வடபுறம் நகர்ந்து வற்றாப்பளை கிராமத்தை முற்றுகையிடுவதோடு வற்றாப்பளை புதுக்குடியிருப்பு வீதியில் உள்ள கேப்பாபுலவு நோக்கி நகர்ந்து கேப்பாபுலவுக்குத் தெற்கே 3 மைல் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

முல்லைத்தீவினுள் நுழைவதற்கு ஏ34 வீதியில் நீராவிப்பிட்டிக்கு அப்பால் நகர்வதற்கு புலிகள் கடும் எதிர்ப்புக் காட்டுவதனால் முல்லைத்தீவு நகரையும், முள்ளிவாய்க்கால்ப் பகுதியையும் முற்றுகையிடும் நோக்கில் கேப்பாபுலவைத் தாண்டி நந்திக்கடலைச் சுற்றிச் சென்று ஏ35 வீதியை முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் ஊடறுப்பதன் மூலம் முல்லைத்தீவை வீழ்த்துகின்ற மூலோபாயத்தினை படைத்தரப்பு வகுத்திருப்பதாகவே தெரிகிறது. கூழாமுறிப்புப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் படையினர் மேற்கு நோக்கி ஒட்டுசுட்டான் நோக்கியோ அல்லது கெருடமடு, பேராற்றுப் பகுதி நோக்கி நகர்ந்து ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியை ஊடறுப்பதன் மூலம் ஒட்டுசுட்டானை வீழ்த்துவதற்கான நகர்வுகளை மேற்கொள்வதற்கான முஸ்தீபுகளில் படையணியினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மாங்குளம் பகுதியிலிருந்து நகர்ந்த படையினர் கரிப்பட்ட முறிப்புவரை நகர்ந்து அங்கிருந்து தெற்காக அம்பகாமம், பீலிக்குளம் வரை நகர்ந்து இரணைமடுக்குளத்தின் தென்புறத்தை அண்மித்து இரணைமடுக்குளத்தின் கிழக்குப் புறமாக பழைய கண்டிவீதிவழியே வட்டக்கச்சி நோக்கி நகர்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கின்றனர். ஆகவே, மொத்தத்தில் வன்னிமீதான படைநடவடிக்கை என்பது பூநகரி ஊடான யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதை திறப்பு, கிளிநொச்சி கைப்பற்றுதல், வன்னிமக்களை விடுவித்தல், ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான போர். என நோக்ங்கள் காலத்திற்குக் காலம் மாறி தற்போது புலிகளை அழித்தொழித்தல் என்ற கோசத்துடன் இன்று வன்னியில் மிகப்பெரும் மனிதப் பேரவல விளிம்பில் வந்து நிற்கிறது.

இராணுவம் மேற்கொண்ட படைநடவடிக்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தமது இழப்புக்களை முடிந்தவரை குறைத்து படையினருக்கு எவ்வளவு இழப்புக்களை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு இழப்புக்களை ஏற்படுத்தி, படைகளின் முன்னணிப் படைப்பிரிவுகளைச் சிதைத்து படிப்படியான தந்திரோபாயப் பின்வாங்கல்களை மேற்கொண்டுவந்த புலிகள் இயக்கம் இன்று கிழக்கு வன்னியின் வட அரைப்பாகத்தில் குறுகிய பகுதியினுள் தனது முழுப்படையணிகளையும் குவித்துள்ளது. இந்நிலையில் மூன்று பக்கங்களிலும் இராணுவ நெருக்குதல்களை எதிர்கொண்டவாறு தற்காப்புத் தாக்குதல் வியூகத்தை கடைப்பிடிப்பதென்பது இனியும் தொடர முடியாது.

வன்னியில் ஆனையிறவு நோக்கியமுனை, இரணைமடுக் குளப்பகுதி நோக்கியமுனை, கரிப்பட்டமுறிப்பு ஒட்டுசுட்டான், மற்றும் முல்லைத்தீவு, கேப்பாபுலவு, ஆகிய முனை கள் நோக்கி சண்டைகள் விரிந்திருப்பதனால் ஒடுக்கப்பட்டிருக்கின்ற குறுகிய நிலப்பரப்பினுள் செறிந்திருக்கும் ஒட்டு மொத்த வன்னிமக்களின் அன்றாடப் பிரச்சி னைகள் ஒருபுறம், இராணுவ நெருக்குதல்கள் மறுபுறம் என புலிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களை முறியடிப்பதற்கு வெறும் தற்காப்பு முறியடிப்புத் தாக்குதல்கள் இனியும் பயனளிக்கப் பேவதில்லை.

எனவே வன்னிமீது போடப்பட்டிருக்கும் இறுக்கமான முடிச்சை அவிழ்ப்பதற்கும் இராணுவ முஸ்தீபை தடுத்து நிறுத்துவதற்கும் ஒரேவழி புலிகள் மேற்கொள்ளும் வலிந்த தாக்குதலேயன்றி வேறெகுவும் இல்லை என்ற நிலைக்கு விடுதலைப் புலிகளை இட்டுச் சென்றுவிட்டது. ஆகவே, தமிழீழ விடுதலைப் போராட் டத்தில் இழப்புக்களும், பின்னடைவுகளும் ஒன்றும் புதியவையும் அல்ல. நிரந்தரமா னவையும் அல்ல.

இதற்கு உதாரணமாக கிளிநொச்சி நகரமே பல முறை கைமாறி விட்டதல்லவா? காலத்திற்குக் காலம் ஏற்பட்ட நெருக்கடிகள் இழப்புக்களையும் தாண்டி ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டம் உத்வேகத்துடன் முன்னோக்கி தள்ளப்பட்டதுதான் வரலாறு. ஆகவே கிளிநொச்சி வீழ்ந்தால் என்ன?. முல்லைத்தீவு பறிபோனால்தான் என்ன? வெற்றிகள் எப்போது ஒருவருக்குச் சொந்தமானதல்லவே. காலச்சக்கரம் சுழலும் காத்திருக்கும் தருணம் கைகூடும். களங்கள் கைமாறும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் பாதையை மீண்டும் ஒரு முறை செப்பனிட்டு முன்னோக்கி நகர்ந்த்தபடும் என்பதில் புலிகள் இயக்கம் உறுதியாகவே உள்ளது. எனவே விடுதலைப் போராட்டங்கள் முடிந்ததாகவோ அழிந்ததாகவோ உலக வரலாற்றில் நாம் எங்கேனும் கண்டதுண்டா? போராட்டம் என்பது தொடர்ச்சியானதே. அது முடிவில்லாததும் கூட.

Leave a Reply

Your email address will not be published.