புலிகள் மீதான தடையை நீக்கு! தமிழக பா.ஜ.க., குமுதம்

புலிகள் மீதான தடையை நீக்கு!” என்று எதிர்பாராத ஓர் இடத்திலிருந்து ஒரு குரல் இப்போது எகிறிப் பாய்ந்திருக்கிறது. அப்படியொரு குரல் எதிரொலித்திருக்கும் இடம், தமிழக பா.ஜ.க. செயற்குழு கூட்டம்.

“இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்” என்று தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் குரல்கொடுத்து வரும் நிலையில், அதற்கும் ஒருபடி மேலே போய், “முதலில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்” என்ற குரல், பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் ஓங்கி ஒலித்திருக்கிறது.

இந்தக் கோரிக்கையை வழிமொழிந்து தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், அந்தக் கோரிக்கைக்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது முக்கியமானது. அது மட்டுமல்ல, “சிறையில் இருக்கும் ராஜீவ் கொலையாளி நளினியை, பிரியங்காவே நேரில் சந்தித்துவிட்டு வந்தபிறகு புலிகளை எதிர்க்க காங்கிரஸ்காரர்களுக்கு எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது” என்று, தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசனும் அந்தக் கூட்டத்தில் குரல் கொடுத்துள்ளார். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதை முன்மொழிந்தவர் பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் வைத்தியலிங்கம். அவரை நாம் சந்தித்துப் பேசினோம்.

“`தனி ஈழம் மற்றும் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசுபவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்’ என்று இளங்கோவன், தங்கபாலு, ஞானசேகரன் போன்றவர்கள் பேசி வருகிறார்கள். இது கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் முயற்சி. வன்முறை மூலம் சுதந்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பா.ஜ.க.வுக்கு இல்லை. ஒன்றுபட்ட இலங்கை என்பதுதான் பா.ஜ.க. உள்பட பல கட்சிகளின் நிலைப்பாடும் கூட. அதேவேளையில், நாம் காந்திய வழியில் சுதந்திரம் பெற்றோம் என்பதற்காக நம் கருத்தைத் தமிழீழ மக்களிடம் திணிக்கக் கூடாது.

சுதந்திரப் போராட்டத்தின்போது நாம் ஆங்கிலேயருடன் போட்ட எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஆங்கிலேயர்கள் கிழித்தெறியவில்லை. ஆனால், சிங்கள அரசு இலங்கைத் தமிழர்கள் தொடர்பான மூன்று ஒப்பந்தங்களை இதுவரை கிழித்தெறிந்திருக்கிறது. இந்தநிலையில் அப்படிப்பட்ட அரசுடன் பேச்சு நடத்தினால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எப்படி வரும்?

இலங்கையில் `ஆயுதப்போராட்டம் கூடாது’ என்று சொல்லும் சிங்கள அரசு முதலில் `என்ன மாதிரியான அரசியல் தீர்வு?’ என்பதைச் சொல்ல வேண்டும். அதைவிட்டுவிட்டு, `ஆயுதத்தைக் கீழே போடு! அப்போதுதான் பேச்சுவார்த்தை’ என்பதை ஏற்க முடியாது” என்ற வைத்தியலிங்கத்திடம் நாம் சில கேள்விகளைத் தொடுத்தோம்.

புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நீங்கள் திடீரென குரல் கொடுப்பது எதற்காக?

“இந்தியாவில் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படும் இருபத்தாறு இயக்கங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் புலிகள் இயக்கம் மட்டும்தான் நம் நாட்டைச் சேராத, அந்நிய மண்ணில் அவர்களின் உரிமைக்காகப் போராடும் ஒரே இயக்கம்.

புலிகள் தங்கள் போராட்டத்திற்கு இந்தியாவைத் தளமாகப் பயன்படுத்துகிறார்களா என்பதைத் தடுத்துக் கண்காணிப்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக ராஜீவ் கொலை சம்பவத்தால் புலிகள் இயக்கத்தை நாம் தடை செய்துள்ளோம். அந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெரும்பான்மையானவர்கள் தண்டிக்கப்பட்டும் விட்டார்கள்.

இந்தநிலையில், ஈழத்தமிழர்களின் உரிமைக்காகப் போராடுபவர்களை இன்னமும் ராஜீவ் கொலையோடு தொடர்புபடுத்தி பேசிக் கொண்டே இருந்தால், ஓர் இனமே (தமிழினமே) அழிந்து போகும். `ராஜீவ் கொலையை மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்’ என்று கூறிவரும் காங்கிரஸ் நண்பர்கள், அவர்களது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

முதல்வர் கருணாநிதி தலைமையில் டெல்லி சென்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள், பிரதமரைச் சந்தித்த போது, `இலங்கைத் தூதராக தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும், ஈழப் பிரச்னையில் பிரதமருக்கு ஆலோசனை சொல்ல இரண்டு தமிழர்களை நியமிக்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூட மத்திய அரசு சுணக்கம் காட்டுகிறதே?

தமிழகத்தில் தேசிய கட்சிகள் செல்வாக்கு இழக்கும் நிலை ஏற்பட்டால், அதற்கு ஈழப்பிரச்னையை காங்கிரஸ் கட்சி கையாண்ட முறையே காரணமாக இருக்கும். அதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்.பி. சீட் கூட கிடைக்காத நிலை உருவாகும். காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து அதன் தோழமைக் கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

வடநாட்டுத் தலைவர்கள் பலருக்கு ஈழப்பிரச்னை பற்றித் தெரியவில்லை. அவர்களுக்கு அதை நாம் புரிய வைக்க வேண்டும். ஈழப்பிரச்னை பற்றித் தெரிந்தவர்களுக்குக் கூட தற்போதைய நிலையையும், நமது உணர்வுகளையும் எடுத்துரைக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் செயற்குழு கூட்டத்தில் நான் அப்படிப் பேசினேன்.”

ஈழத்தமிழர் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி எடுத்த முயற்சிகள் குறித்து……?

“தனி ஈழம், விடுதலைப்புலிகள் போன்ற வார்த்தைகளை அண்மைக்காலமாக முதல்வர் தவிர்த்து பொறுப்புடன் பேசி வருகிறார். பொறுப்புடன் பேச வேண்டியதுதான். அதற்காக நியாயத்தையும், கடமையையும் தவிர்த்து விடக்கூடாது. புலிகள் பற்றிப் பேசினால் காங்கிரஸுன் கூட்டணி முறிந்து விடும் என்ற பயம் முதல்வருக்கு இருக்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போது, ஈழப்பிரச்னையில் வேகம் காட்டும் கருணாநிதி, ஆளும் கட்சியானவுடன் மெத்தனமாகச் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது.

தனது தலைமையில் டெசோ மாநாட்டில் நிறைவேற்றிய தனி ஈழத் தீர்மானத்திற்கு முதல்வர் கருணாநிதி உயிரூட்ட வேண்டும். ஈழப்பிரச்னையில் ராமதாஸ் கூட நேர்மையான கருத்தை வலியுறுத்தி வருகிறார். அவரது கருத்து ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தால்தான் அவர் தொடர்ந்து கருத்துக் கூறாமல் இருக்கிறார். ஈழப்பிரச்னையில் கருணாநிதி தயக்கம், தாமதம் காட்டும் நிலையில், மத்திய அரசிற்கு நெருக்கடி கொடுக்கும் வேலையில் ராமதாஸ் இறங்க வேண்டும்.”

மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

“பன்முகங்களோடு ஒருமைப்பாட்டுடன் இருக்கும் நம் நாடு, இலங்கைக்கு அறிவுரை சொல்லலாம். வெளிறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி பேச்சு நடத்துவதைவிட, பிரதமரே டெல்லியில் இருந்து கொண்டு, `போரை நிறுத்து!’ என சிங்கள அரசுக்குச் சொல்லலாம். கிளிநொச்சியைப் பிடித்துவிட்டால் போர் முடிவுக்கு வந்து விடும் என்று சிங்கள அரசு நினைக்கிறது. பல்வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்துள்ள தமிழர்கள்தான் போரை நடத்துகிறார்கள். அவர்களால் தொடர்ந்து போரை நடத்த முடியும்.”

புலிகளை ஆதரித்துப் பேசிவரும் உங்கள் கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திடீரென அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் நிலை ஏற்பட்டால், புலிகள் விஷயத்தில் முரண்பாடு ஏற்படாதா?

“ஈழப்பிரச்னையில் கொள்கை வேறுபாடு கொண்ட வைகோ, அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறார். பல்வேறு விஷயங்களில் அ.தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் ஒத்த கருத்து இருக்கிறது. எனவே, வைகோவுக்கு இருக்கும் நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது.

ஈழப்பிரச்னையில் கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா மற்றும் சில தமிழ்ப்பிரதிநிதிகளுடன் பேசி தீர்வு ஏற்படுத்த முடியுமா? அந்தத் தீர்வு நிலைக்குமா? ஈழத்தமிழர்கள் அத்தனை பேரும் இப்போது விடுதலைப்புலிகளின் பின்னால்தான் நிற்கிறார்கள். எனவே, ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் யார் எனக் கண்டுபிடிப்பதில் நமது கருத்தைத் திணிக்கக் கூடாது. அதை முடிவு செய்யும் பொறுப்பை ஈழத் தமிழர்களிடமே விட்டுவிட வேண்டும். புலிகளுக்கு எதிரானவர் என்று ஜெயலலிதா தன்னை உருவகப்படுத்திக் கொண்டாலும் ஈழத்தமிழர்களின் முடிவுக்கு மதிப்பளிப்பார் என்று நம்புகிறேன்.”

– படம் : ஞானமணி
குமுதம்

Leave a Reply

Your email address will not be published.