ஹமாஸ் தாக்குதல்-பயங்கரவாத செயல்: புஷ்

வாஷிங்டன்: இஸ்ரேல் மீது தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் பயங்கரவாத செயல் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.

வானொலி மூலம் புஷ் உரையாற்றியபோது இஸ்ரேலின் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், பயங்கரவாதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. அது தடுக்கப்பட வேண்டும். அப்படி தடுக்கப்படும் வரை அமைதி பற்றி பேசுவதை ஏற்க முடியாது.

காஸா பகுதியில் முழுமையான போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு தூதரக அளவிலான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. போர் நிறுத்தம் என்பது ஒருவழிப்பாதையாக இருக்கக் கூடாது. போர் நிறுத்தம் என்று கூறி விட்டு இஸ்ரேல் மீது ராக்கெட் வீசித் தாக்குவது நியாயமல்ல.

இஸ்ரேல் பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் ராக்கெட் தாக்குதல்கள் பயங்கரவாத செயல்களாகும் என்றார் புஷ்.

ஹமாஸ் ராணுவத் தலைவர் பலி

இந்த நிலையில் இன்று நடந்த இஸ்ரேல் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ராணுவ பிரிவு தலைவரான அபு ஜக்காரியா அல் ஜமால் என்பவர் உயிரிழந்தார். ஏற்கனவே வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்களி்ல் ஒருவரான நிஸார் ரய்யான் என்பவர் தனது குடும்பத்தோடு கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

நேற்று இரவு முழுவதும் இஸ்ரேல் விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்ததால் காஸா நகரமே சுடுகாடு போலாகியுள்ளது.

எங்கு பார்த்தாலும் மரண ஓலங்களும், காயமடைந்தவர்களின் கண்ணீர் அலறல்களுமாக உள்ளன. காஸா நகரின் பெரும்பாலான கட்டடங்கள் இடிந்து பெயர்ந்து போய் விட்டன.

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினரை சமாதானப்படுத்தி சண்டையை நிறுத்த எகிப்து அரசு தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இஸ்ரேலிய படைகள் காஸா பகுதியை சூறையாடி வருகின்றன. படு மோசமாக நடந்து வரும் இந்தத் தாக்குதல்களில் இதுவரை 429க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் தரப்பில் நான்கே நான்கு பேர்தான் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.