ஈழத் தமிழர்களை காக்க அனைவரும் வீறுகொண்டு எழுங்கள்: கனிமொழி வேண்டுகோள்

ஈழத் தமிழர்களை காப்பதற்கு அனைவரும் வீறுகொண்டு எழுங்கள் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து புத்தக வெளியீட்டு விழாக்களில் முதலமைச்சர் கருணாநிதி ஆற்றிய 11 இலக்கிய சொற்பொழிவுகள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

“என் தம்பி வைரமுத்து” என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமை தாங்கி, புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் கவிஞர் கனிமொழி கருணாநிதி உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழர்கள் எப்போதுமே தங்களுடைய கடந்த கால பெருமைகளில் ஆழ்ந்து அதைப்பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பவர்களாக இருக்கின்றனர். கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி இன்று காதில் விழுந்தது. அங்கு ஒரு இனம் மெல்ல அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

ஆனால் அதனை மறந்து, அதனை தாண்டி ஏதேதோ தேடல்களில் நம்மை தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய சகோதரர்களும், சகோதரிகளும் அங்கு வாழும் வகையற்று அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்த பிள்ளைகளுக்கு எதிர்காலம் என்ன என்பதே தெரியாத நிலை உருவாகிவிட்டது.

எது நடக்காது என்று நம்பிக் கொண்டிருந்தோமோ? அது இன்று நடைபெற்று விட்டது. நாம் இன்னும் பழங்கதைகள் பேசிக் கொண்டிருப்பதில் பலனில்லை. இதற்காக இந்த படுகொலைகளை எதிர்த்து, இன அழிவை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். தயவு செய்து, வீறுகொண்டு எழுங்கள், நம்முடைய சகோதரர்களுக்காக, தொப்புள் கொடி உறவுகளுக்காக குரல் கொடுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.