கிளிநொச்சி வீழ்ச்சி: போர் ஓயாது, புலிகளின் உத்தி மாறும் – தலைவர்கள் கருத்து

சென்னை: கிளிநொச்சி வீழ்ந்து விட்டதால் ஈழப் போர் முடிவடைந்து விடாது. விடுதலைப் புலிகள் தங்களது உத்திகளை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள். போர்க்களம் தான் மாறியிருக்கிறது, போர் தொடரும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைநகரமான கிளிநொச்சியை இலங்கை ராணுவம் நேற்று மாலை கைப்பற்றியது.

இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவர்களின் பொதுவான கருத்து, போர்க்களம் மாறி விட்டது. ஆனால் போர் தொடரும். விடுதலைப் புலிகள் தங்களது போர் உத்தியை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள் என தெரிவித்துள்ளனர்.

கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகையில், கிளிநொச்சி வீழ்ந்து விட்டதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில்தான் செய்திகள் வருகின்றன. அதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்தால்தான் எங்களால் கருத்து சொல்ல முடியும் என்றார்.

தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், கிளிநொச்சியின் வீழ்ச்சியால் போர் முடிந்து விடும் என கூற முடியாது. ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்துள்ளது. ஆனால் புலிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இத்துடன் போர் முடியும் என நான் நினைக்கவில்லை. வேறு மாதிரியான போர் உத்திகளை புலிகள் கடைப்பிடிக்கலாம். போர்க்களங்கள் மாறலாம் என்றார்.

பழ.நெடுமாறன்

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறுகையில், ஏற்கனவே கிளிநொச்சி ஒரு மயான பூமி. அங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. அதை பிடித்து விட்டதாக ராணுவம் கூறியுள்ளது. இது அவர்களுக்கு பெரிய வெற்றி அல்ல.

போர் இலங்கையை சூழும், வேறு பகுதிகளுக்கும் போர் பரவும் என்றார்.

தமிழர் இயக்கத் தலைவர் தியாகு

தமிழர் இயக்கத் தலைவர் தியாகு கூறுகையில், இது இந்தியாவின் துரோகத்தால் விளைந்தது. போரில் வெற்றிகளும், தோல்விகளும் சகஜம். இது இன்னும் ஒரு நிகழ்வு அவ்வளவுதான். இது அவர்களுக்கு சிறிய பின்னடைவுதான்.

போர்க்களங்களை இழக்கலாம், ஆனால் போரை இழந்து விட்டதாக கூற முடியாது. இந்த வழியில் வெல்ல முடியாவிட்டால் வேறு உத்திகளுக்கு மாறும் திறன் விடுதலைப் புலிகளுக்கு உண்டு. போரில் வெல்ல பல வழிகள் உள்ளன என்றார்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.