பாக்.கில் 30 தீவிரவாத குழுக்கள்: அந்தோணி

டெல்லி: பாகிஸ்தானில் இன்னும் 30க்கும் மேற்பட்ட தீவிரவாத குழுக்கள் சுதந்திரமாக இயங்கி வருகின்றன என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானின் நிலையில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. அது அப்படியேதான் இருக்கிறது.

வெறும் அறிக்கை விடுவதும், உறுதிமொழிகள் அளிப்பதும் முக்கியமல்ல. செயல்தான் முக்கியம். அந்த வகையில் பார்த்தால், பாகிஸ்தானிடம் எந்த மாற்றமும் இல்லை.

நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம், நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்பதை பாகிஸ்தான் நிரூபிக்க வேண்டும்.

பாகிஸ்தானில் இன்னும் 30க்கும் மேற்பட்ட தீவிரவாத குழுக்கள் உள்ளன. அனைத்துமே சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன.

அப்படி இருக்கையில் பாகிஸ்தானை எப்படி நம்புவது. செயல்படுவதற்கு பாகிஸ்தானுக்கு காலக் கெடு எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் செயல்பட்டாக வேண்டும்.

நாங்கள் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கவில்லை. இந்தியத் தரப்பிலிருந்து எந்த படைக் குவிப்பும் இல்லை. எல்லாமே வழக்கம் போலவே நடந்து கொண்டிருக்கின்றன. நாம் தயார் நிலையில் இருக்கக் கூடாது என நமக்கு யாரும் கூறத் தேவையில்லை. கூறவும் முடியாது.

பாதுகாப்புப் படையினர் அவர்களது கடமையை செய்து வருகின்றனர். எந்தவித மிரட்டல் போக்கையும் அவர்கள் கடைப்பிடிக்கவில்லை.

எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அது நமது கடமை. அதைத்தான் பாதுகாப்புப் படையினர் செய்து வருகின்றனர். நாட்டுக்கு எந்த திசையிலிருந்து ஆபத்து வந்தாலும் சமாளிக்க அவர்கள் ஆயத்த நிலையி்ல இருக்க வேண்டும். அப்படித்தான் அவர்களும் உள்ளனர் என்றார் அந்தோணி.

Source & Thanks : aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.