கிளிநொச்சியை கைப்பற்றியது இலங்கை ராணுவம் சுற்றி வளைப்பு! புலிகள் தலைமையகம் வீழ்ந்ததால் பெரும் பதட்டம்

கொழும்பு: இலங்கையில் நடந்துவரும் உள்நாட்டுச் சண்டையில், தற்போது இலங்கை ராணுவத்துக்கு கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்றியுள்ளது. அதிபர் ராஜபக்ஷே இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, “கிளிநொச்சி ராணுவ வீரர்கள் கைவசம் வந்துவிட்டது’ என்றார்.இலங்கையில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. புலிகளை அடியோடு ஒழிப்பதற்கான முயற்சியை கடந்த இரு மாதங்களுக்கு முன் இலங்கை ராணுவம் தீவிரப்படுத்தியது.

புலிகள் மீது கடும் தாக்குதல் : கடந்த சில வாரங்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே சண்டை தீவிரமடைந்தது. துவக்கத்தில் கடும் உயிரிழப்பை சந்தித்த இலங்கை ராணுவம் பின், சுதாரித்துக் கொண்டு படிப்படியாக முன்னேறியது. நேற்று முன்தினம் கிளிநொச்சியின் வடக்கு பகுதியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள பரந்தன் என்ற நகரத்தையும், தெற்கு பகுதியில் இரணமேடு என்ற இடத்தையும் இலங்கை ராணுவம் கைப்பற்றியது. இந்த இரு பகுதிகளில் இருந்தும் கிளிநொச்சியை நோக்கி ராணுவம் வேகமாக முன்னேறியது. இதுதவிர, கிழக்கு பகுதி வழியாகவும் ராணுவ வீரர்கள் முன்னேறினர். ராணுவத்துக்கு ஆதரவாக இலங்கை போர் விமானங்களும் புலிகள் மீது கடும் தாக்குதல் நடத்தின. புலிகளின் கடும் எதிர்ப்பை முறியடித்து ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக நேற்று கிளிநொச்சிக்குள் நுழைந்தனர். ஏராளமான பீரங்கிகளும் கிளிநொச்சிக்குள் நுழைந்தன.கிளிநொச்சியை கைப்பற்றி விட்டதாக இலங்கை ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, புலிகள் காட்டுப் பகுதிகளுக்குள் தப்பி ஓடிவிட்டதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களை கீழே போட்டு ஓட்டம் ; இலங்கை பாதுகாப்பு செயலர் கோட்டபயா ராஜபக்ஷே கூறுகையில், “வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் வழியாக கிளிநொச்சிக்குள் நுழைந்த ராணுவம், நகரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. கிளிநொச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இன்று (நேற்று) அதிகாலையில் நடந்த சண்டையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆயுதங்களை கீழே போட்டு விட்டு புலிகள் உடனடியாக சரண் அடைய வேண்டும். விரைவில் புலிகள் அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்படுவர்’ என்றார்.எனினும், இதுகுறித்து புலிகள் தரப்பில் இருந்த எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது பற்றியும் தகவல் வெளியிடவில்லை. ஆனால், பரந்தனை ராணுவம் கைப்பற்றியதில் புலிகள் தரப்பு தளபதி இளம்பெரியான் மரணம் அடைந்ததாகக் கூறப்பட்டது.பின்னடைவு: கிளிநொச்சியை கைப்பற்றியதன் மூலம், கடந்த 25 ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டு போரில் ராணுவத்துக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிளிநொச்சியை இழந்ததன் மூலம், புலிகளுக்கு பலத்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

புலிகளின் வான்படை தளம், தகவல் தொடர்பு மையங்கள், ஆலோசனை மையங்கள் ஆகியவை கிளிநொச்சியில் தான் இருந்தன. போர் நிறுத்த காலத்தில் கிளிநொச்சி தான், புலிகளின் முக்கிய ஆலோசனை மையமாக விளங்கியது. பேச்சுவார்த்தைக்காக நார்வே உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் புலிகள் அமைப்பின் தலைவர்களை கிளிநொச்சியில் தான் சந்தித்துப் பேசினர்.இத்தனை சிறப்பு மிக்க கிளிநொச்சியை இழந்தது, புலிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

புலிகள் சரண் அடைய ராஜபக்ஷே வலியுறுத்தல்: கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றியதை அடுத்து, அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே “டிவி’யில் உரையாற்றினார். அவர் பேசுகையில், “கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவந்த சண்டையில், இலங்கை ராணுவ வீரர்கள் தற்போது மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்ற ராணுவ வீரர்கள், நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் “ஹீரோ’க்களாக உருவெடுத்துள்ளனர். தோல்வி சந்தித்துள்ள புலிகள் உடனடியாக ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, ராணுவத்திடம் சரண் அடையும்படி இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன்’ என்றார். மேலும் அவர், “இத்துடன் சண்டை முடியாது. புலிகள் சக்தி இனி சுருங்கி விடும். தனியாக ராஜ்ஜியம் அமைக்க புலிகள் முயன்றது இந்த வெற்றியால் முறியடிக்கப்பட்டது’ என்றார். கிளிநொச்சி வீழ்ந்ததையடுத்து, இலங்கை பங்குச் சந்தையில் பங்குகள் விலை ஏற்றம் கண்டன.

தற்கொலை படை தாக்குதல்: கொழும்பில் உள்ள விமானப் படை தலைமை அலுவலகம் அருகே பயங்கர சத்தத்துடன் நேற்று குண்டு வெடித்தது. இதில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இலங்கை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இது ஒரு தற்கொலைப் படை தாக்குதல். காயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்’ என்றனர். இந்த தாக்குதலை அடுத்து, கொழும்பு முழுவதும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் ஓட்டம் எங்கே?: பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்களின் தலைமையகமாக செயல்பட்டு வந்த கிளிநொச்சியை புலிகள் இழந்துள்ளனர். கிளிநொச்சியில் இருந்து தப்பி ஓடிய புலிகள் எங்கு மறைந்துள்ளனர் என்பது குறித்து இலங்கையில் பரபரப்பாக பேசப்படுகிறது.இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது:

புலிகள் கிளிநொச்சியை இழந்தாலும், முல்லைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சில முக்கியமான இடங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. மேலும்,வவுனியாவின் அடர்ந்த வனப் பகுதியும், புலிகளின் முக்கியமான மறைவிடமாக உள்ளது. கிளிநொச்சியில் இருந்து தப்பி ஓடிய புலிகள், இந்த வனப் பகுதிக்குள் தான் மறைந்து இருப்பர் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இங்கிருந்தபடியே, இலங்கை ராணுவத்துக்கு எதிரான தங்களது தாக்குதல்களை அவர்கள் தொடர்வர். குறிப்பாக, கொரில்லா முறை தாக்குதல்களை அவர்கள் நிகழ்த்தக் கூடும். இதனால், இலங்கை ராணுவத்துக்கு புலிகளால் தொடர்ந்து நெருக்கடி ஏற்படும்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.