தமிழர்களின் கலாசாரத்தை விளக்க அமெரிக்கா செல்லும் மாணவிகள் (03.01.2009) செய்திகள்.

மதுரை: தமிழர்களின் கலாசாரம், பண்பாட்டை விளக்கவும், தலைமைப் பண்பு பயிற்சிக்காகவும் மதுரை லேடி டோக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் லட்சுமிப்பிரியா, ஜெயப்பிரிய துர்கா அமெரிக்கா செல்கின்றனர்.  இதுபற்றி முதல்வர் மெர்சி புஷ்பலதா கூறியதாவது: நாங்கள் அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாண மேரி பால்வின் கல்லூரியுடன் பன்னாட்டு கலாசார பரிவர்த்தனை ஒப்பந்தம் செய்துள்ளோம். இரு கல்லூரிகளிலும் ஆண்டுக்கு தலா இரு மாணவிகளுக்கு தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் மேரி பால்வின் கல்லூரியை சேர்ந்த இரு மாணவிகள் இங்கு பயிற்சியில் ஈடுபட்டனர். தற்போது எங்கள் கல்லூரியை சேர்ந்த பி.காம்.,இரண்டாம் ஆண்டு மாணவிகள் லட்சுமிப்பிரியா, ஜெயப்பிரிய துர்கா நேர்காணல் மூலம் சிறந்த மாணவிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவரும் ஜன.,5 ல் அமெரிக்கா செல்கின்றனர். மே வரை அங்கு பயிற்சியில் ஈடுபடுவர். இருவரும் அங்கு பயின்ற கல்வி முறையை இங்கு மாணவிகளுக்கு கற்பிப்பர். இதன் மூலம் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும். சுய முடிவுகளை எடுக்க முடியும்.

லட்சுமிப்பிரியா: எனது தந்தை சந்திரமோகன் பாலித்தீன் பைகள் தயாரிப்பு தொழில் செய்கிறார். நானும் ஜெயப்பிரிய துர்காவும் அமெரிக்க கல்லூரியில் ஒரு செமஸ்டர் முழுவதும் படிக்க மனநலம், மேடை நாடகம், விளம்பரம், கம்ப்யூட்டர் பாடங்களை தேர்வு செய்துள்ளோம். எங்கள் கல்லூரியில் பயிற்சி பெற வந்த அமெரிக்க மாணவிகள் நமது குடும்ப முறைகளை பார்த்து வியந்தனர். தமிழர்களின் கலாசார, பண்பாட்டு அடையாளங்களான பண்டிகைகள், விழாக்களை அவர்கள் போட்டோக்களில் மட்டும்தான் இதுவரை பார்த்துள்ளனர். நாங்கள் அங்கு சேலை உடுத்தி பொங்கல் வைத்தல், கடவுள் வழிபாடு, கோலம் போடுதல், நமது உணவுமுறைகள் மற்றும் அன்றாட பழக்க வழக்கங்கள் பற்றி விளக்கம் அளிக்கிறோம். ராணுவ பயிற்சியிலும் ஈடுபட உள்ளோம்.

ஜெயப்பிரிய துர்கா: எனது தந்தை மாரிராஜன் சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டராக உள்ளார். நானும், லட்சுமிப்பிரியாவும் மகாத்மா மாண்டிசோரி பள்ளியில் பிளஸ் 2 ஒரே வகுப்பில் படித்தோம். இருவரும் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக அமெரிக்கா செல்கிறோமே என்ற தயக்கம் கூட இருந்தது. பெற்றோர் ஊக்குவித்தனர். என்.சி.சி.,யில் சேர்ந்து பல முகாம்களுக்கு சென்றுள்ளோம். இதனால் எங்களுக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டது.  அமெரிக்காவில் மாணவர்களின் குழுவிவாதம், நேரம் கிடைக்கும் போது விருப்பப்படி தேர்வு எழுதுதல், படைப்பாற்றல் திறன் சிறப்பம்சங்களாக கூறப்படுகிறது. தமிழர்களின் சமையல் முறைகள் பற்றி விளக்க ஏலம், கிராம்பு, மிளகாய் பொடிகளை கொண்டு செல்கிறோம். இவ்வாறு கூறினர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.