கடை உரிமையாளர் கொலை தமிழருக்கு 12 ஆண்டு சிறை – மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு

கடை முதலாளியை கொலை செய்த தமிழருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் நாகராஜன் வைத்தியலிங்கம் (22), முருகேசன் நடராஜன் (36), ராமலிங்கம் சுந்தரவேல் (19). இவர்கள் 3 பேரும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் காந்தி கணபதி என்பவரின் சலூனில் வேலை பார்த்தனர். காந்தி கணபதி கடந்த ஆண்டு மே மாதம் தலையில் தடியால் அடித்து கொல்லப்பட்டார்.

இதையடுத்து, அவரது கடையில் வேலை பார்த்த நாகராஜன், முருகேசன், ராமலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது 3 பேரும் தங்களை காந்தி கணபதி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்தனர். குற்றத்தை நாகராஜன் மட்டும் ஒப்புக் கொண்டார். அதனால் அவருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் விசா காலம் முடிவடைந்ததால் அவர்கள் இருவரையும் குடியேற்றக் கட்டுப்பாடு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

நாகராஜன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது தண்டனை காலம் அவர் கைது செய்யப்பட்ட 2008ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதியில் இருந்து கணக்கிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published.