கிளிநொச்சி படையினர் வசம் புலிகள் சரணடைய வேண்டும் – ஜனாதிபதி

கிளிநொச்சியினை படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த வெற்றியினை ஒரு இனத்துக்கு எதிரான வெற்றியாகவோ, வடக்கு மீதான தெற்கின் வெற்றியாகவோ அர்த்தப்படுத்தக் கூடாது. இது எமது நாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

புலிகள் தமது கனவுலகின் ராஜ்ஜியத்தை இழந்துள்ளனர். எனவே, ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு இப்போதாவது சரணடையுமாறு புலிகளுக்கு இறுதியான வேண்டுகோளை நான் விடுக்கின்றேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.

கிளிநொச்சி இன்று படையினரால் கைப்பற்றப்பட்டமையினை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு இன்று மாலை 4 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், அமைச்சர்கள் உட்பட பெருமளவானோர் பங்குபற்றியிருந்தனர். இங்கு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

கிளிநொச்சியை கைப்பற்றியதன் மூலம் இதுவரை காலமும் விடுதலைப் புலிகள் “பயங்கரவாதத்தின் பணயக் கைதிகளாகவிருந்த எமது சகோதர மக்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்த வெற்றியை ஒரு இனத்திற்கு எதிராக இன்னொரு இனத்தின் வெற்றியாகவோ, வடக்கு மீதான தெற்கின் வெற்றியாகவோ அர்த்தப்படுத்தலாகாது. இது எமது நாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும்.

எமது படையினர் பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொண்ட யுத்தமானது உலகிற்கே ஒரு பாடமாகும். அப்பாவி மக்களுக்கு இழப்புக்களின்றி யுத்தத்தை முன்னெடுத்தனர்.

தேசத்தின் தலைவன் என்ற ரீதியில் நாட்டுக்கான உயிர்த்தியாகங்கள் செய்து, நெருக்கடியான நேரத்திலும் போராடி வெற்றி பெற்ற எமது படையினருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்தோடு முப்படைகளின் தளபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது படையினரின் நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பல்வேறு சதி நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. ஆனால், இறுதியில் அனைத்தும் தோல்வியைத் தழுவின.

விடுதலைப் புலிகள் இன்று முல்லைத்தீவில் சிறிய காட்டுப் பகுதிக்குள் சிக்குண்டுள்ளனர். நான் அவர்களுக்கு இறுதியான வேண்டுகோளை விடுக்கின்றேன். ஆயுதங்களை கீழேவைத்துவிட்டு இப்போதாவது சரணடையுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.

பல தசாப்த காலங்களாக புலிகளின் கட்டுப்பாட்டில் பணயக்கைதிகளாக சிக்கியுள்ள எமது சகோதர மக்களை விடுவித்து அவர்களுக்கு சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் உரிமையை வழங்குவோம்.

இந்த நாட்டின் தலைவன் என்ற ரீதியில் அனைத்து இன, மத மக்களும் ஒரே கொடியின் கீழ் ஒன்றுபட்டு வாழும் நிலைமையை உருவாக்குவேன்.

உலகிலேயே பிரபல்யமான பயங்கரவாதக் குழுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் கோட்டையை எமது படையினர் தகர்த்தெறிந்துள்ளனர்.

கிளிநொச்சியை கைப்பற்றுவதென்பது, ராஜபக்ஷவின் கனவு என புலிகளின் தலைவர் அண்மையில் கூறியிருந்தார். ஆனால், அது எனது கனவாக மட்டும் இருக்கவில்லை. பிரிவினைவாதத்தை எதிர்க்கும், இனவாத, பயங்கரவாதத்தை எதிர்க்கும், சமாதானத்தை ஜனநாயகத்தை விரும்பும் சிங்கள, தமிழ், முஸ்லிம் உட்பட இலங்கை வாழ் அனைத்து மக்களினதும் கனவாக இருந்தது.

அக்கனவை எமது படையினர் நிறைவேற்றியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் கோட்டையை மட்டும் எமது படையினர் தகர்க்கவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப் போராட்டத்தில் வெற்றியை பெற்றுள்ளனர்.

ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக பெற்றுக்கொண்ட வெற்றியாகவோ, தெற்கு வடக்கை தோல்வியடையச் செய்ததாகவோ இதனை அர்த்தப்படுத்த வேண்டாம்.

இது நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்த பெரு வெற்றியாகும்.

ஒரு சிலரின் கனவு இராஜ்ஜியத்தின் தலைநகரமாகவே கிளி“நொச்சி கருதப்பட்டு வந்தது. உலகின் ஊடகங்கள் மட்டுமல்ல சில ராஜதந்திர பிரிவினரும் இதனை நம்பி தமது நடவடிக்கைகளை கடந்த காலங்களில் மேற்கொண்டனர். இதற்கு மேலும் அக்கனவுலக ராஜ்ஜியத்தின் தலைநகரத்தை புலிகள் இழந்துள்ளனர்.

நாடு பூராவும் ஒரே மாதிரியான சட்டத்தை முன்னெடுக்கவே 2005ஆம் ஆண்டு ஜனவரி தேர்தலில் மக்கள் எனக்கு ஆணை வழங்கினர். பல்வேறுபட்ட உடன்படிக்கைகள் மூலம் பிரிக்கப்பட்டிருந்த நாட்டில் ஒற்றையாட்சியை பாதுகாக்கவே வாக்களித்தனர்.

இதற்கமையவே படை நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.

எமது படைத் தளபதிகள், படையினரின் அர்ப்பணிப்புக்கள், பாதுகாப்பு செயலாளர் உட்பட அனைவரின பங்களிப்பு விசேடமாக மக்களின் பொறுமையான பங்களிப்பும் இவ்வெற்றிக்கு உந்து சக்தியாக அமைந்தது. அவர்களனைவருக்கும் எனது நன்றிகளும் கௌரவமும் உரித்தாகட்டும்.

Leave a Reply

Your email address will not be published.