கிளிநொச்சி சுற்றி வளைப்பு-ராணுவம்!!

கொழும்பு: புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியை சுற்றி வளைத்துவிட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

பல மாத கடும் போருக்குப் பின் கிளிநொச்சி சுற்றி வளைக்கப்பட்டுவிட்டதாக இலங்கை ராணுவத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை இந்திய தொலைக்காட்சியிடமும் அந் நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலாளரான கோதபய ராஜபக்சே உறுதி செய்தார். கிளிநொச்சியை எல்லா பக்கங்களில் இருந்தும் ராணுவம் சுற்றி ளைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நகர் தான் புலிகளி்ன் அரசியல், ராணுவத் தலைமையகமாகும்.

இது குறித்து கடந்த வியாழக்கிழமை அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்திடம் பேசிய புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், நாங்கள் ஒரு கொரில்லா இயக்கம். எங்கள் பகுதியை இழந்தாலும் கூட தாக்குதலை கைவிட மாட்டோம். கொரில்லா தாக்குதலை இலங்கை ராணுவத்தால் சமாளிக்க முடியாது என்றார்.

வடக்கு மற்றும் தெற்கு கிளிநொச்சியிலிருந்து நகருக்குள் ராணுவம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சண்டையி்ல் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த தகவல் இல்லை.

ஆனால், விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பிடிபடும் வரை இந்தப் போர் ஓயாது என ராணுவத் தரப்பில் கூறப்படுகிறது.

முன்னதாக முல்லைத்தீவில் வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் 15 புலிகள் பலியானதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

50 விடுதலைப் புலிகள் பலி:

கிளிநொச்சியைப் பிடிக்க நடந்த சண்டையில் 50 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், பல பெண் விடுதலைப் புலிகள் பிடிபட்டிருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

ராணுவத்தின் 57வது பிரிவு கிளிநொச்சி ரயில் நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.