அஸ்ஸாமில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு- 5 பேர் பலி

குவஹாத்தி: புத்தாண்டின் முதல் நாளான நேற்று மாலை அஸ்ஸாமில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 5 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செல்லவிருந்த பாதையில் நடந்த இந்த குண்டுவெடிப்பால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

புத்தாண்டின் முதல் நாளில் நடந்துள்ள இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு உல்பா தீவிரவாதிகளே காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி அஸ்ஸாமில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 88 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

நேற்று மாலை ஐந்தே முக்கால் மணியளவில் குவஹாத்தியில் உள்ள சாந்திபூர் – பூத்நாத் சாலையில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.

சைக்கிளில் அந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த வழியாகத்தான் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செல்லவிருந்தார். அதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

அதேபோல 6 மணியளவில் பங்காகர் என்ற இடத்தில் ஒரு குண்டு வெடித்தது. இங்கு 2 பேர் உயிரிழந்தனர். 6க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுவும் சைக்கிளிலேயே வைக்கப்பட்ட குண்டாகும். இந்த குண்டுவெடிப்பில் ஒரு கடை தீப்பிடித்து எரிந்தது.

இந்த இரு குண்டுவெடிப்புகளுக்கும் முன்னதாக பிற்பகல் இரண்டரை மணியளவில் பிருபாரி என்ற இடத்தில் உள்ள காசநோய் மருத்துவமனை அருகே டிபன் பாக்ஸில் வைத்திருந்த ஒரு குண்டு வெடித்துச் சிதறியது. இதில் 3 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் உல்பா தீவிரவாதிகளே இதற்குக் காரணம் என போலீஸார் நம்புகின்றனர்.

இந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து அஸ்ஸாம் முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பின்னர் உளவுப் பிரிவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ப.சிதம்பரம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அவரது வருகைக்கு சற்று முன்பாக இந்த குண்டுவெடிப்புகள் நடந்திருப்பது உளவுப் பிரிவின் செயல்பாடு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

source :- thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.