சென்னையில் உலக தமிழர்களின் முதல் பொருளாதார மாநாடு

சென்னை வளர்ச்சி கழகத்தின் சார்பில் உலகத் தமிழர்களின் பொருளாதார மாநாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் சந்திப்பு வரும் ஜனவரி 6 மற்றும் 7ம் தேதிகளில் நடக்கிறது.

தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியாவிலும் வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 15 தமிழர்களுக்கு ‘தொழில் மாமணி’ விருது வழங்கப்படுகிறது.

இது குறித்து உலக தமிழர் பொருளாதார மாநாட்டின் அமைப்பாளர் வி.ஆர்.சம்பத், மாநாட்டின் வரவேற்பு குழு தலைவரும், வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கோ.விசுவநாதன் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய தினமான ஜனவரி 8ம் தேதியை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு இந்தியர் தினமாகக் கொண்டாடுகிறது.

அந்த தினத்தில் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை அழைத்து கலை, பொருளாதாரம், பண்பாடு குறித்து பிரவேசி பாரதிய திவஸ் என்ற பெயரில் மாநாடும் நடத்துகிறது.

மத்திய அரசு எங்களின் கோரிக்கையை ஏற்று இந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டை இந்த முறை தமிழகத்தில் நடத்துகிறது. வரும் ஜனவரி 8ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த மாநாடு நடக்கிறது.

இதில் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் தமிழர்களுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் இந்த உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டை 6,7ம் தேதிகளில் நடத்துகிறோம்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும், உள்ளூர் தமிழர்களையும் ஒன்றிணைத்து ஒருவருக்கொருவர் தொழில், பொருளாதாரரீதியில் உதவி வளர்வதற்கும், தமிழ்நாட்டில் அவர்களது முதலீடுகளை அதிகரிக்கச் செய்யவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

மாநாட்டில் தமிழ் பொருளாதார மேதைகள், சட்ட வல்லுனர்கள், மருத்துவர்கள் உள்பட உலகம் முழுவதிலும் இருந்தும் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கிறார்கள்.
இதில் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, வேங்கடபதி, எஸ். ரகுபதி, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழர்கள் 15 பேருக்கு உலக தமிழர் தொழில் மாமணி, மக்கள் மாமணி, மருத்துவ மாமணி எனும் விருதுகள் வழங்கப்படுகிறது என்றனர்.

உலக தமிழர் பொருளாதார மாநாட்டின் தங்கும் வசதி குழுவின் தலைவரும், சென்னை பிரசிடெண்ட் ஹோட்டல் தலைவருமான அபுபக்கர் கூறுகையில்,

உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கும் ஹோட்டல்களில் தங்கும் செலவில் 50 சதவீதமும், போக்குவரத்து செலவில் 50 சதவீதமும், உணவு செலவில் 30 சதவீதமும் சலுகை வழங்கப்படும் என்றார்.

பேட்டியின் போது வி.ஜி.பி. நிறுவனங்களின் தலைவர் வி.ஜி.சந்தோசம், இந்திய-ஜப்பான் வணிகர் சங்க தலைவர் ஆர்.வீரமணி, சென்னை மருத்துவ கல்லூரி பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் வி.பி. நாராயணன் ஆகியோரும் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.